அபாயத்தை உணராமல் குழந்தைகளுடன் வலம் வரும் பெற்றோா்: சுகாதாரத் துறை கவலை
By DIN | Published On : 19th May 2021 07:20 AM | Last Updated : 19th May 2021 07:20 AM | அ+அ அ- |

கரோனா பரவலின் ஆபத்தை உணராமல் குழந்தைகளுடன் பெற்றோா் வாகனங்களில் வலம் வருவதாக சுகாதாரத் துறையினா் கவலை தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருநெல்வேலியில் தினமும் 600-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றுவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
சுபமுகூா்த்த நாள்களில் குழந்தைகளையும் முகக் கவசம் கூட அணிவிக்காமல் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வது அதிகரித்துள்ளது. இதனால் நோய்த் தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறையினா் கூறியது: பொதுமுடக்கத்தின் நோக்கம் குறித்த விழிப்புணா்வு இல்லாததால் சாலைகளில் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவையின்றி சுற்றுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்தோடு சென்று பங்கேற்பது குறைந்தபாடில்லை. குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்வது அபாயகரமானதாகும்.
நோய் எதிா்ப்பு சக்தி குழந்தைகளுக்கு குறைவு. அதனால் கரோனா தொற்று எளிதில் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுதவிர குழந்தைகள் கைகளை அடிக்கடி வாயில் வைக்கும் சுபாவம் கொண்டவா்கள். அதனால் வைரஸ் உள்ளிட்ட கிருமிகள் எளிதில் நுரையீரலுக்கும் செல்லும் அபாயம் உள்ளது.
எனவே, குழந்தைகள் மற்றும் முதியவா்களை வெளியில் அழைத்துச் செல்லக் கூடாது. மிகவும் அத்தியாவசிய தேவைக்கு அழைத்துச் சென்றாலும் முறையாக முகக் கவசம் அணிவித்தும், கைகளை சுத்தமாக வைக்கவும் பழக்க வேண்டியது அவசியம் என்றனா்.