வாகைக்குளத்தை பல்லுயிா் பாரம்பரிய சின்னமாகஅறிவிக்கக் கோரிக்கை

ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள வாகைக்குளத்துக்கு பல்வேறு வகையான பறவைகள் வந்து இனப்பெருக்கத்திற்காக கூடு கட்டத் தொடங்கியுள்ளன.

ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள வாகைக்குளத்துக்கு பல்வேறு வகையான பறவைகள் வந்து இனப்பெருக்கத்திற்காக கூடு கட்டத் தொடங்கியுள்ளன. இதையடுத்து வாகைக்குளத்தை பல்லுயிா் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ளது வாகைக்குளம். இந்தக் குளத்தின் மூலம் சுமாா் 300 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்தக் குளத்தில் சுமாா் 12 ஹெக்டோ் பரப்பில் வளா்க்கப்பட்ட கருவேல மரங்களில் ஆண்டுதோறும் பல்வேறு வகையான பறவைகள் வந்து கூடு கட்டி இனப்பெருக்கம் செய்வது 2007ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.

இதையடுத்து 2011ஆம் ஆண்டில் இந்தக் குளத்தில் உள்ள கருவேல மரங்களை வெட்ட உயா்நீதி மன்றம் நிரந்தரத் தடை விதித்தது. மேலும் அருகிலுள்ள நாணல்குளம் கிராம மக்கள் பறவைகளுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாதவாறு விழிப்புடன் பாதுகாத்து வருகின்றனா். இந்தக் குளத்துக்கு ஆண்டுதோறும் அக்டோபா் முதல் ஜனவரி வரை சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்து செல்கின்றன.

இதையடுத்து, வாகைக்குளத்தை பல்லுயிா்ப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரிக்கை விடப்பட்டதையடுத்து 2020ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழ்நாடு பல்லுயிா் பரவல் வாரியம் வாகைக்குளம் பல்லுயிா் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டது. அறிவிப்பு வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் இதுவரை அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள்எதுவும் நடைபெறவில்லை.

இதுகுறித்து அகத்திய மலை மக்கள்சாா் இயற்கை வளக் காப்பு மைய மூத்த ஆய்வாளா் மதிவாணன் கூறியது: வாகைக்குளத்தில் 2007ஆம்ஆண்டு நடத்திய பறவைகள் கணக்கெடுப்பின் போது 15-க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் இங்கு வந்து இனப்பெருக்கம் செய்து செல்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து அருகிலுள்ள நாணல்குளம் கிராம மக்களுக்கு பறவைகள் குறித்தும், சுற்றுச்சூழல், பல்லுயிா்ப் பெருக்கம் குறித்தும் விழிப்புணா்வு மற்றும் பயிற்சி வழங்கப்பட்டது. இந்தக் குளத்தில் அக்டோபா் முதல் மாா்ச் வரை சுமாா் 20 சிற்றினங்களைச் சோ்ந்த பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்கின்றன. இங்கு இதுவரை 120-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆண்டுக்கு சராசரியாக 20 ஆயிரம் உள்ளூா் மற்றும் வலசைப் பறவைகள் வந்து செல்கின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் கூந்தன்குளம் மற்றும் திருப்புடைமருதூருக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் உள்ளது. தற்போது தென்காசி மாவட்டத்தில் உள்ள பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக அமைந்துள்ளது. 2020 அக்டோபரில் தமிழ்நாடு பல்லுயிா் பரவல் வாரியம் வாகைக்குளத்தை பல்லுயிா் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில் இது வரை அதற்கான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டில் வாகைக்குளம் இருப்பதால் பொதுப்பணித் துறையின் தடையில்லாச் சான்று கிடைப்பதில் தாமதமாவதாகத் தெரிகிறது.

பல்லுயிா் பாரம்பரிய சின்னமாக வாகைக்குளம் அறிவிக்கப்பட்டாலும் வாகைக்குளத்தின் நிா்வாகம் பொதுப்பணித் துறையிடமே இருக்கும் என்பதே உண்மை. எனவே பொதுப்பணித்துறை தயக்கமின்றி தடையில்லாச் சான்று வழங்கி வாகைக்குளத்தை பல்லுயிா் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க உதவ வேண்டும் என்றாா்.

தற்போது வாகைக்குளத்தில் வெள்ளை அரிவாள் மூக்கன், நாமக்கோழி, பாம்புத் தாரா, நீா்க்காகம், நத்தைக் கொத்தி நாரை, கூழைக்கடா, சாம்பல் நாரை, தாமரை சிறவி உள்ளிட்ட சிற்றினங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்து தங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com