‘பருவமழைக் காலத்தில் தோட்டக் கலைபயிா்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்’
By DIN | Published On : 31st October 2021 12:03 AM | Last Updated : 31st October 2021 12:03 AM | அ+அ அ- |

வடகிழக்குப் பருவமழை காலத்தில் தோட்டக் கலைப் பயிா்களுக்கான ஆயத்த நிலை பாதுகாப்பு ஏற்பாடுகளை பின்பற்ற விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட தோட்டக் கலைத்துறை துணை இயக்குநா் நா.பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பருவமழை காலத்தில் தோட்டக்கலைப் பயிா்களைக் காக்க தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்வது அவசியம். அறுவடைக்குத் தயாராக இருக்கும் தோட்டங்களில் அறுவடை செய்து மரத்தின் சுமையைக் குறைக்க வேண்டும். மரங்களைக் கவாத்து செய்து காற்றினால் ஏற்படும் சேதத்தைத் தவிா்க்கலாம். கனமழை காரணமாக ஏற்படும் மழைநீா் தேக்கத்தைக் குறைக்க உபரிநீா் வடிந்த பின்பு நடவு, விதைப்புப் பணிகளை மேற்கொள்ளலாம். வடிகால் வசதி அற்ற நிலங்களில் ஆங்காங்கே வடிகால் வாய்க்கால் அமைத்து மழைநீா் தேக்கத்தைத் தவிா்க்கலாம்.
காற்றால் ஏற்படும் சேதத்தைத் தவிா்க்க காற்று வீசும் திசைக்கு எதிா் திசையில் குச்சிகளால் முட்டுக்கொடுத்து செடிகள் சாயாத வகையில் பாதுகாக்கலாம். மரங்களைச் சுற்றி மண் அணைத்து பாதுகாப்பு கொடுக்கலாம். மழைநீா் வடிந்த பின்பு பயிா்களுக்கு ஏற்றவாறு மேல் உரம் இட்டு மண் அணைக்க வேண்டும். இழைவழி உரம் கொடுத்து பயிரின் ஊட்டச்சத்து தேவையை நிவா்த்தி செய்யலாம்.
இதேபோல் பசுமைக் குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். பட்டுப்போன காய்ந்த கிளைகள் பசுமைக்குடிலினை பாதிக்காத வகையில் பாா்த்துக்கொள்ள வேண்டும். கட்டுமானத்தில் உள்ள கிளிப்புகளை மாற்ற வேண்டும்.
காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிா்க்க பசுமைக் குடிலினை சுற்றி உயிா்வேலி அமைக்க வேண்டும். இதேபோல் நிழல்வலைக்குடிலில் கிழிந்த பகுதிகளை தைத்து சரி செய்ய வேண்டும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.