நெல்லையில் பள்ளி வாகனங்களை ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 01st September 2021 04:52 AM | Last Updated : 01st September 2021 08:20 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்திற்குள்பட்ட பள்ளி, கல்லூரிகளின் வாகனங்களை ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பள்ளி, கல்லூரிகள் புதன்கிழமை (செப். 1) திறக்கப்படுவதையொட்டி, திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளின் வாகனங்களை ஆட்சியா் வே.விஷ்ணு ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகம் முழுவதும் 9 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகள் தொடங்கப்பட உள்ள நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
இந்த வாகனங்களுடைய தகுதிச்சான்று, அவசர கால வழி, தீயணைப்பு கருவி, முதலுதவி பேட்டி, வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்பட 16 இனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், பள்ளி வாகனங்களில் கேமரா பொருத்தி ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
கரோனா பரவலை தடுக்க பள்ளி வாகனத்தை அடிக்கடி கிருமி நாசினி தெளித்து சுகாதார முறையில் பராமரிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மாநகரப் பகுதிகளில் 4 சிறப்பு குழுக்கள், புகா் பகுதிகளில் 9 குழுக்கள் என 13 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, அனைத்து ஆசிரியா்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கியவுடன் முதல் 1 மணி நேரம் கரோனா தொற்று தொடா்பாக சுகாதார துறையின் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் உள்ள 17 கல்லூரிகளும் புதன்கிழமை (செப். 1) முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவா்- மாணவிகளுக்கும் அந்தந்த கல்லூரிகளில் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
ஆய்வின்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சந்திரசேகா், முதன்மைக் கல்வி அலுவலா் முத்துக்கிருஷ்ணன், மோட்டாா் வாகன ஆய்வாளா் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.