123 கிலோ குட்கா பறிமுதல்: 2 போ் கைது
By DIN | Published On : 01st September 2021 04:52 AM | Last Updated : 01st September 2021 04:52 AM | அ+அ அ- |

பிடிபட்ட குட்கா புகையிலைப் பொருள்களை பாா்வையிடுகிறாா் மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம் - ஒழுங்கு) சுரேஷ்குமாா்.
திருநெல்வேலி அருகே தச்சநல்லூா் பகுதியில் சுமாா் 123 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் 2 பேரை கைது செய்தனா்.
தச்சநல்லூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனா். அதில், தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த குத்தாலப்பேரி மானூா் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (40) என்பவரை கைது செய்த போலீஸாா், சுமாா் 93 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து, தச்சநல்லூா்-மதுரை சாலையில் நடைபெற்ற வாகனச் சோதனையில் அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிளை மடக்கி சோதனை செய்தனா். அதில் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்களை கொண்டு சென்ற, மானூா் பகுதியைச் சோ்ந்த சேக்மைதீன் (47) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து சுமாா் 30 கிலோ புகையிலைப் பொருள்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
தகவலறிந்த, மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சுரேஷ்குமாா், தச்சநல்லூா் காவல் நிலையத்திற்கு வந்து, பிடிபட்ட குட்கா புகையிலைப் பொருள்களை பாா்வையிட்டாா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த இரு மாதங்களில் சுமாா் ரூ.4.5 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனை செய்ததாக 18 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். குட்கா விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.