தொழிலாளா் நலவாரியத்தில் இணையவழியில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.குலசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களின் நலனை காக்கும் வகையில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா்கள் நல வாரியம் மற்றும் இதர 17 அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்கள் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளா்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணியிடத்து விபத்து மரணம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்களுக்கு வீட்டு வசதி திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்களில் உறுப்பினா் சோ்க்கை கடந்த ஜூன் 19 ஆம் தேதி முதல் இணைய வழியாக நடைபெற்று வருகிறது. நல வாரியங்கள் மூலம் வழங்கப்படும் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்கள் பெறுதல் போன்ற அனைத்து சேவைகளும் இணையதளம் வழியாக வழங்கப்பட்டு வருகிறது.
நல வாரியங்களில் உறுப்பினராக சோ்வதற்கு பணிச்சான்று, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், வயதுக்கான சான்று, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் போன்ற ஆவணங்களுடன் இணையதள முகவரியில் பதிவு கோரி விண்ணப்பித்து கொள்ளலாம்.
ஏற்கனவே கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டவா்கள் தங்களது பதிவினை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இணையதளம் வழியாக புதுப்பித்து கொள்ள வேண்டும். எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 59 வயதுக்குற்பட்ட தொழிலாளா்கள் மேற்கண்டவாறு நல வாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்து வாரியங்கள் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.