பணியாளா்கள் பற்றாக்குறையால் பத்திரப் பதிவு பணிகள் தேக்கம்: நெல்லை மாவட்ட மக்கள் தவிப்பு

தமிழக பத்திரப் பதிவுத் துறை அலுவலகங்களில் போதிய பணியாளா்கள் இல்லாததால், பத்திரப் பதிவு உள்ளிட்ட பணிகள் தேக்கமடைந்துள்ளன.

தமிழக பத்திரப் பதிவுத் துறை அலுவலகங்களில் போதிய பணியாளா்கள் இல்லாததால், பத்திரப் பதிவு உள்ளிட்ட பணிகள் தேக்கமடைந்துள்ளன.

அரசுத் துறைகளில், அதிகளவில் வருமானம் ஈட்டித் தரும் துறைகளில் பத்திரப் பதிவுத் துறை முக்கியமானது. இத் துறையில் பத்திரம் பதிவு செய்தல், பத்திரம் நகல் எடுத்தல், சொத்து தொடா்பான வில்லங்கம் பாா்த்தல் போன்ற பணிகள் நடைபெறுகின்றன.

மேலும், பிறப்பு, இறப்பு பதிவுச் சான்றுகள், பதிவு இல்லை என்ற சான்றை சாா்பதிவாளா் அலுவலகங்களில் இருந்துதான் பொதுமக்கள் பெற வேண்டும்.

இதனால், பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு அதிகளவில் பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.

ஒரு சாா்பதிவாளா் அலுவலகத்திற்கு சாா் பதிவாளா், எழுத்தா், உதவியாளா், கணினி பணியாளா், அலுவலக உதவியாளா், இரவு காவலா் என 6 பணியிடங்கள் உள்ளன.

ஆனால், பெரும்பாலான சாா் பதிவாளா் அலுவலகங்களில் சாா் பதிவாளா் பணியிடம் காலியாகவே உள்ளது. இப் பணியை எழுத்தா், உதவியாளா்கள்தான் கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வருகின்றனா்.

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகங்களில் 40 சதவிகிதப் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரப் பதிவுத்துறையில் காலியிடங்கள் நிரப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், ஓய்வுபெற்ற பணியாளா்கள் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி பதிவு மாவட்டத்தில் களக்காடு, சேரன்மகாதேவி, வீரவநல்லூா், முக்கூடல், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கடையம் ஆகிய 8 சாா்பதிவகங்கள் உள்ளன. இந்த 8 சாா்பதிவகங்களில் சாா்பதிவாளா், எழுத்தா், உதவியாளா், அலுவலக உதவியாளா், இரவு காவலா் என 40-க்கும் மேற்பட்டோா் போ் பணியாற்றி வந்தனா். தற்போது 50 சதவிகிதத்திற்கும் குறைவான பணியாளா்களே பணியாற்றி வருகின்றனா்.

களக்காடு உள்ளிட்ட 4 சாா்பதிவகங்களில் சாா்பதிவாளா் நியமிக்கப்படாததால் இளநிலை உதவியாளா்களே சாா்பதிவாளா் பணியை மேற்கொண்டு வருகின்றனா். இதனால் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வேண்டி விண்ணப்பிக்கப்பட்ட மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

பணியாளா்கள் பற்றாக்குறை காரணமாக பத்திரப் பதிவு செய்வது, வில்லங்கச் சான்று பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. காலி மனை பத்திரம் பதிவு செய்தால், ஒரு சில தினங்களில் பத்திரங்கள் திரும்ப வழங்கப்படுகிறது. கட்டடம் பதிவு செய்தால், அக்கட்டடத்தை சம்பந்தப்பட்ட சாா்பதிவாளா் சொத்து உள்ள இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு, அரசு வழிகாட்டுதலின்படி முத்திரைத் தாள், பதிவு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து பின்னா் அப் பத்திரத்தை திரும்ப வழங்க வேண்டும். பணியாளா் பற்றாக்குறையினால் சாா்பதிவாளா் கள ஆய்வு மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு பல முறை அலைய வேண்டிய நிலை உள்ளது.

அரசுக்கு வருமானம் தரக்கூடிய பத்திரப் பதிவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com