புத்தாண்டு:நெல்லை தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை

2023 ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி திருநெல்வேலியில் தேவாலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
புத்தாண்டு:நெல்லை தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை
Updated on
2 min read

திருநெல்வேலி: 2023 ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி திருநெல்வேலியில் தேவாலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

2022ஆம் ஆண்டு நிறைவடைந்து 2023ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி சனிக்கிழமை நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. பாளையங்கோட்டையில் உள்ள மிகவும் பழமையான தேவாலயமான தூய சவேரியார் பேராலயத்தில் புத்தாண்டு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் எஸ்.அந்தோனிசாமி மறையுரையாற்றினார்.  திருப்பலியின் முடிவில் கிறிஸ்துவர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். பேராலய பங்குத்தந்தை சந்தியாகு, உதவி பங்குத்தந்தையர்கள் செல்வின், இனிகோ, ஆயரின் செயலர் மைக்கேல் பிரகாசம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தென்னிந்திய திருச்சபை சார்பில் முருகன்குறிச்சியில் உள்ள தூய திரித்துவ பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு ஆராதனை சனிக்கிழமை நள்ளிரவில் நடைபெற்றது. புத்தாண்டு தேவ செய்திக்கு பின்பு, திருவிருந்து உபசரனை நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் காணிக்கைகளைச் சமர்ப்பிக்க சென்றபோது 2023 ஆம் ஆண்டுக்கான வாக்குத்தத்த வசன அட்டைகள் வழங்கப்பட்டன. பிரார்த்தனைகளின் முடிவில் அனைவருக்கும் கேக்குகள் வழங்கப்பட்டன. மாலையில் ஞானஸ்நான ஆராதனையும், உடன்படிக்கை ஆதாரனையும் நடைபெற்றது.

இதேபோல பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம், சேவியர் காலனியில் உள்ள தூய பேதுரு தேவாலயம், புனித அந்தோனியார் தேவாலயம், மேலப்பாளையத்தில் உள்ள தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரத்தில் உள்ள தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகரில் உள்ள குழந்தையேசு தேவாலயம், உடையார்பட்டியில் உள்ள இயேசுவின் திரு இருதய ஆலயம், திருநெல்வேலி நகரத்தில் உள்ள அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி. நகரில் உள்ள வேளாங்கன்னி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ள அந்தோனியார் தேவாலயம், மகாராஜநகரில் உள்ள தூய யூதா ததேயூ தேவாலயம் ஆகியவற்றிலும் புத்தாண்டு சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

புத்தாண்டையொட்டி கேக்குள் மற்றும் இனிப்பு வகைகளின் விற்பனை பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலியில் களைகட்டியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வண்ணமயமான கேக்குகளை வாங்கிச் செல்வதைக் காண முடிந்தது. மோட்டார்சைக்கிள்களில் அதிவேகமாக இளைஞர்கள் செல்வதைத் தடுக்கவும், பெண்களிடம் பகடி செய்வதைத் தடுக்கவும் மாநகர காவல் துறை சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸôர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், திருநெல்வேலி சந்திப்பு திருநெல்வேலி நகரம், மேலப்பாளையம், பாளையங்கோட்டை பகுதிகளில் சாலைகள் சந்திக்கும் பகுதிகள், மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com