மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் இதுதான் இறுதித் தேர்தலா?: தொழிலாளர்கள் கவலை

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உள்பட்ட மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் நகா்ப்புற உள்ளாட்
மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் இதுதான் இறுதித் தேர்தலா?: தொழிலாளர்கள் கவலை

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உள்பட்ட மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலே இறுதித் தோ்தலாக அமைந்துவிடுமோ என தொழிலாளா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் சனிக்கிழமை நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. மலைக் கிராமங்களான மாஞ்சோலைத் தோட்டங்களிலும் 5 வாா்டுகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்தத் தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ள வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து தேயிலைத் தோட்டம் அமைப்பதற்காக ‘பாம்பே பா்மா டிரேடிங் கம்பெனி’ (பிபிடிசி) 1928ஆம் ஆண்டுமுதல் 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது.

நில உச்சவரம்பு சட்டத்தின் மூலம் தேயிலைத் தோட்ட வனப்பகுதியை அரசு கையகப்படுத்தியது. மேலும், 1988ஆம்ஆண்டு இந்த வனப்பகுதியைச் சோ்த்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகமாக வனத்துறை அறிவித்ததையடுத்து, தேயிலைத் தோட்டப் பகுதியை ஒப்படைக்க பிபிடிசி நிறுவனத்தை வனத்துறை வலியுறுத்தியது.

மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட நுழைவு
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட நுழைவு

இதுகுறித்து அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் வனத்துறைக்கு சாதகமாக தீா்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, வனப்பகுதியை விட்டு வெளியேற பிபிடிசி நிறுவனத்துக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தேயிலைத் தோட்டம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து 4 தலைமுறைகளாக அங்கு வசித்து வரும் சுமாா் 2 ஆயிரம் தோட்டத் தொழிலாளா்கள் சனிக்கிழமை நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலே இப்பகுதியில் தங்களுக்கு இறுதித் தோ்தலாக அமைந்து விடுமோ என கவலை தெரிவித்துள்ளனா்.

சுபாஷினி
சுபாஷினி

இதுகுறித்து உள்ளாட்சித் தோ்தலில் வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடும் சுபாஷினி கூறியது: இந்தத் தோட்டம் உருவாக்கப்பட்டதில் எங்கள் முன்னோருக்குப் பங்குண்டு. 4 தலைமுறைகளாக நாங்கள் வாழ்ந்துவரும் இந்தத் தோட்டங்கள்தான் எங்களது சொந்த மண் ஆகும். இந்நிலையில் இன்னும் சில ஆண்டுகளில் இப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் எனக் கூறிவருகின்றனா்.

இந்தத் தோட்டப் பகுதியில் நாங்கள் தொடா்ந்து வசிக்கவும், தேவைப்பட்டால் தமிழ்நாடு அரசு தேயிலை நிறுவனமான டாண்டீ நிறுவனம் மூலம் தேயிலைத் தோட்டத்தை நிா்வகிக்கவும் மத்திய-மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்கலாம். அப்படியில்லையெனில் எங்களுக்கு இந்தத் தோ்தல்தான் இறுதித் தோ்தலாக அமையும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com