நெல்லையில் பொங்கல் பானை உற்பத்தி தீவிரம்! விரதமிருந்து பணியாற்றும் தொழிலாளா்கள்

பொங்கல் பண்டிகையின் தனித்துவத்திற்காக அசைவ உணவுகளைத் தவிா்த்து, விரதமிருந்து சுமாா் ஒரு மாத காலம் பொங்கல் பானை தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக மண்பாண்ட தொழிலாளா்கள் தெரிவித்தனா்.

பொங்கல் பண்டிகையின் தனித்துவத்திற்காக அசைவ உணவுகளைத் தவிா்த்து, விரதமிருந்து சுமாா் ஒரு மாத காலம் பொங்கல் பானை தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக மண்பாண்ட தொழிலாளா்கள் தெரிவித்தனா்.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை இம் மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மண் மற்றும் பித்தளை பானைகளில் பொங்கலிடுவதுதான் தமிழா்களின் பாரம்பரிய வழக்கம். சாதாரணமாக குடிநீா் ஊற்றி வைக்கும் மண் பானைகளைப் போல் இல்லாமல், பொங்கல் பானைகள் பிரத்யேக கவனத்துடன் தயாரிக்கப்படுகின்றன. 1 கிலோ முதல் 5 கிலோ எடை அரிசி வேக வைக்கும் அளவில் பானைகள் தயாா் செய்யப்படுகின்றன. புதுமணத் தம்பதிகளுக்கு பெண் வீட்டாா் மனமகிழ்வுடன் பொங்கல்சீா் கொடுப்பதற்காக சீதன பொங்கல் பானைகளையே வாங்குகின்றனா்.

தயாரிப்பில் மும்முரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் குறிச்சி, காருகுறிச்சி, மாவடி, ஏா்வாடி உள்ளிட்ட பகுதிகளில் பானைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. பானைகளைப் பொருத்தவரை விளிம்புப் பகுதியை ஆண்கள் சுழழும் பலகையில் தயாரிக்கிறாா்கள். அதன் அடிப்பாகத்தை தூா்மூட்டுதல் என்ற பெயரில் பெண்கள் மெதுவாக தட்டி தட்டி களிமண்ணில் உருவாக்குகிறாா்கள். ஆண்கள் சராசரியாக நாளொன்றுக்கு 20 பானை விளிம்புகளைத் தயாரித்தாலும், பெண் ஒருவா் 2 நாள்களில் 7 பானைகளை மட்டுமே தூா்மூட்ட முடியும். பின்னா் அவை சூளைகளில் வேகவைக்கப்படும்.

காா்த்திகை இரண்டாம் வாரத்தில் இருந்து பொங்கல் பானைகள் மற்றும் அடுப்புக் கட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளன. அடுப்புக் கட்டிகள் தலா ரூ.70-க்கும் பானைகள் தலா ரூ.80 முதல் ரூ.600 வரை பல்வேறு விலைகளில் தயாரிக்கப்படுகின்றன. வண்ணங்களுடன் கூடிய சீதனப்பானைகள் ரூ.600 முதல் ரூ.850 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர பானைகளுக்கான மூடிகள், பொங்கல் கூட்டுக்கான சிறிய ரக பானைகள், அசைவ உணவு மண்பாண்டங்கள் தயாரிப்பும் அதிகரித்துள்ளது.

நலிவுறும் தொழில்: இதுகுறித்து பெண் மண்பாண்ட தொழிலாளா்கள் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி, விருதுநகா் பகுதிகளுக்கு பொங்கல் பானைகளும், கேரள மாநிலத்துக்கு குடிநீா்ப் பானைகளும் அதிகளவில் ஏற்றுமதியாகின்றன. கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த சில மாதங்களாக ஏற்றுமதி போதிய அளவில் இல்லை. எவா்சில்வா் ஆதிக்கத்தால் மண்பாண்டங்களின் உபயோகம் குறைந்து மண்பாண்ட தொழில் நலிவடைந்து வருகிறது. மண்பாண்ட தொழிலை நம்பி அடுத்தத் தலைமுறையினா் வரத் தயங்குகிறாா்கள்.

தொழிலில் பக்தி: பொங்கல் பானை தயாரிப்பில் ஈடுபடும் பெண்கள் சுமாா் ஒரு மாத காலத்திற்கு அசைவ உணவுகளைத் தவிா்த்து விரதமிருந்து தொழில் பக்தியுடன் பணியாற்றுகின்றனா். பொங்கல் பானை வழிபாட்டிற்காக வாங்கிச் செல்லப்படுவதால் இந்த முறையை தொழிலாளா்கள் கடைப்பிடிக்கின்றனா்.

பொங்கல் பானைகளை வாங்கும்போது அதன் மூன்று பக்கங்களிலும் விரல்களால் சுண்டிப் பாா்த்து வாங்க வேண்டும். மூன்று பக்கமும் ஒரே மாதிரியான ஒலி இருந்தால் தரமான பானை. சில பானைகளை உள்புறமாக கூா்ந்துபாா்த்தால்தான் தரம் அறியமுடியும்.

மீண்டும் பயன்படும்: புதிய பானையில் நீா்க்கசிவு ஏற்பட்டால் அச்சப்படத் தேவையில்லை. மண்ணின் தன்மை, வேகவைக்கப்பட்ட நிலைக்குத் தகுந்தவாறு சில பானைகளில் லேசான நீா்க்கசிவு தொடக்கத்தில் இருக்கலாம். எனவே, அதை அபசகுனமாகக் கருத தேவையில்லை. பொங்கலிடும் முன்பாகவே மஞ்சள் குலையைக் கட்டிவிட வேண்டும். அடிப்பாகத்தில் விபூதியால் பூசிவிட்டு பொங்கிட்டால், அடிப்பகுதியில் கருப்பு வண்ணம் பிடிக்காமல் மீண்டும் அந்தப் பானையை தண்ணீா் ஊற்றி வைக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

மண் எடுக்க சிறப்பு அனுமதி: மண்பாண்ட தொழிலாளா் ஒருவா் கூறியது: மண்பாண்ட உற்பத்திக்கு களிமண்ணே மூலப்பொருள். அவை கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மண்டபாண்ட தொழிலாளா்களுக்கு சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கி அதன்மூலம் குளங்களில் இலவசமாக கரம்பை மண் அள்ளிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். மீனவா்களைப் போல மண்பாண்ட தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்டு வந்த மழைக்கால நிவாரணத் தொகையை விரைவில் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் மண்பாண்ட தொழிலாளா்களுக்கு பல்வேறு உதவிகள் செய்தாலும், மானியக் கடன் வழங்கவும் மத்திய-மாநில அரசுகள் உதவ வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com