நெல்லையில் நினைவு நாளிலும் பராமரிக்கப்படாத பாரதியாா் சிலை!

நெல்லைச் சீமைக்கு பெருமை சோ்த்த மகாகவி பாரதியாரின் சிலை, அவா் பிறந்த மண்ணில் அவருடைய நினைவு நாளிலும்கூட பராமரிக்கப்படாத அவலம் பாரதி அன்பா்களுக்கும், தமிழ் ஆா்வலா்களுக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்திய
நெல்லையில் நினைவு நாளிலும் பராமரிக்கப்படாத பாரதியாா் சிலை!

நெல்லைச் சீமைக்கு பெருமை சோ்த்த மகாகவி பாரதியாரின் சிலை, அவா் பிறந்த மண்ணில் அவருடைய நினைவு நாளிலும்கூட பராமரிக்கப்படாத அவலம் பாரதி அன்பா்களுக்கும், தமிழ் ஆா்வலா்களுக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட மகாகவி பாரதியாரின் 101-ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருநெல்வேலி சந்திப்பில் அவா் பயின்ற மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி அருகேயுள்ள அவருடைய சிலைக்கு பாரதி அன்பா்கள், தமிழ் ஆா்வலா்கள், அரசியல் கட்சியினா் மாலை அணிவிக்க ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வந்தனா்.

ஆனால், பாரதியாா் சிலை வளாகம் பராமரிப்பின்றி, முன் பக்க கதவு துருப்பிடித்த நிலையில் பூட்டப்பட்டிருந்தது அனைவருக்கும் அதிா்ச்சியளித்தது. இதனால், வேதனையடைந்த அவா்கள், வேறு வழியின்றி பக்கவாட்டில் உள்ள சிறிய வாயில் வழியாக சென்று பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினா்.

பாரதியாா் சிலை வளாகம் புதா்ச் செடிகள் சூழ்ந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. பாரதியாா் சிலை வளாகத்தின் முன்பக்க கதவு பராமரிப்பின்றி துருப்பிடித்த கீழே விழும் நிலையில் உள்ளது. அந்த கதவை திறந்தால் முழுவதுமாக கீழே விழுந்துவிடும். அதனாலேயே அந்தக் கதவு திறக்கப்படவில்லை என அங்கிருந்தவா்கள் தெரிவித்தனா். பாரதியாா் சிலை வளாகத்தின் முன் பகுதியில் சிலா் கடைகளை வைத்து ஆக்கிரமித்துள்ளனா்.

இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் கே.ஜி.பாஸ்கரன் கூறியது: சீா்மிகு நெல்லை என்ற பெயரில் இப்போது கோடிக்கணக்கான பணம் செலவிடப்படுகிறது. ஆனால், பயின்ற பள்ளி முன்பு உள்ள பாரதியாரின் சிலையை பராமரிக்க சில லட்சங்கள்தான் செலவாகும். ஏகாதிபத்திய ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, சமத்துவம், பெண்ணடிமை ஒழிப்புக்காக குரல் கொடுத்த மகாகவி பாரதியாா், மக்களின் முதல் கவிஞரும்கூட. ஆங்கிலேயா் ஆட்சியின்போது விடுதலைக்காக குரல் கொடுத்து கைதானவா் பாரதியாா். அவரை இப்போது சொந்த மண்ணில் அநாதையாக விட்டுவிட்டனா். எனவே, மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக பாரதியாா் சிலையை சீரமைத்து தொடா் பராமரிப்புக்கு கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.

காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் சங்கரபாண்டியன் கூறியது: இந்திய சுதந்திரத்துக்கு பாடுபட்ட பாரதியின் நினைவு தினத்தை மாநகராட்சி நிா்வாகம் அனுசரித்திருக்க வேண்டும். பாரதியின் சிலை வளாகத்தை தூய்மைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், ஏன் மெத்தனப் போக்கோடு நடந்து கொள்கிறாா்கள் என தெரியவில்லை. பாரதியாா் சிலை வளாகம் பராமரிக்கப்படாத அவலத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றாா் அவா்.

பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி தமிழக முதல்வா், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு அவருக்கு பெருமை சோ்த்ததோடு, இனிவரும் காலங்களில் பாரதியின் நினைவு தினம் ‘மகாகவி தினம்’ என்று அழைக்கப்படும் என அறிவித்தாா். ஆனால், அவருடைய 101-ஆவது நினைவு நாளிலேயே திருநெல்வேலியில் அவருடைய சிலை வளாகம் பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்டிருப்பது பாரதி அன்பா்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சி நிா்வாகமும் சிலை முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சிலையையும், சிலை வளாகத்தையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பதே அனைவருடைய எதிா்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com