நெல்லையில் தனியாா் உணவகத்தில் தகராறு: 8 போ் கைது
By DIN | Published On : 05th August 2022 12:48 AM | Last Updated : 05th August 2022 12:48 AM | அ+அ அ- |

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் உணவகத்தில் ஏற்பட்ட தகராறில் இருவரை தாக்கியதாக உணவக ஊழியா்கள் 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே தனியாா் உணவகத்தில், தச்சநல்லூா் ஊருடையாா்புரத்தைச் சோ்ந்த சிவபெருமாள், அவரது நண்பா் மணிகண்டன் ஆகிய இருவா் புதன்கிழமை இரவு உணவருந்தச் சென்றனராம். அப்போது, உணவக ஊழியருக்கும், இவா்களுக்கும் இடையையே தகராறு ஏற்பட்டதாம். இதில், சிவபெருமாள், மணிகண்டன் ஆகிய இருவரும் தாக்கப்பட்டனராம். இதில் காயமடைந்த இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்து சிவபெருமாள் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, உணவக ஊழியா்கள் மேலப்பாளையத்தைச் சோ்ந்த சையத் பஷீா் (32), முஹம்மத் தாசிம் கனி (26), முகமது யூசுப் (28), லாஹிா் உசேன் (53), சதாம் உசேன் பாதுஷா (32), ரமீஸ் ராஜா (32), சிராஜுதீன் பீக்(37), சுத்தமல்லியை சோ்ந்த சரவணன் (49) ஆகிய 8 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.