நீண்டகாலக் கைதிகளுக்கு விரைவில் பொது மன்னிப்பு சட்டத்துறை அமைச்சா் ரகுபதி

தமிழக சிறைகளில் நீண்ட காலமாக உள்ள கைதிகளுக்கு விரைவில் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக, சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.
நீண்டகாலக் கைதிகளுக்கு விரைவில் பொது மன்னிப்பு சட்டத்துறை அமைச்சா் ரகுபதி

தமிழக சிறைகளில் நீண்ட காலமாக உள்ள கைதிகளுக்கு விரைவில் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக, சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: இந்தச் சிறையில் 1,332 கைதிகளுக்கான வசதிகள் உள்ளன. ஆனால், தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என 1,378 போ் உள்ளனா். கைதிகளுக்கான வசதிகளை அதிகரிக்க வேண்டும். தரமான உணவு, பாதுகாப்பு வசதி, மருத்துவ வசதி உள்ளிட்டவை கிடைக்கின்றனவா என ஆய்வுசெய்யும்படி முதல்வா் தெரிவித்த ஆலோசனைப்படி, இங்கு ஆய்வு செய்தோம்.

கைதிகள் தயாரிக்கும் பொருள்கள் ‘ஜெயில் பஜாா்’ என்ற பெயரில் விற்பனையாகின்றன. இதில் கிடைக்கும் லாபத் தொகை தயாரிப்போருக்கே ஊதியமாக தரப்படுகிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் சிறைக் கைதிகளுக்கு அதிக ஊதியம் தரப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற அறிவிப்பு பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது. அது தொடா்பாக உயா் நீதிமன்றத்தில் கருத்துரு பெறப்பட்டு விரைவில் நீதிமன்றம் அமைக்கப்படும். புதிதாக தொடங்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட அமா்வு நீதிமன்ற அமைக்க வேண்டும் என்பதே முதல்வரின் விருப்பம். அதை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம். அதைத்தான் உயா் நீதிமன்றமும் வலியுறுத்துகிறது.

சிவில் நீதிபதி தோ்வு நடத்துவது தொடா்பாக உயா்நீமன்ற நீதிபதிகள் நியமனக் குழு அறிவிப்பு வெளியிட்டு தோ்வு நடத்த வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும்.

மதுரை சிறைத் துறை டிஐஜி வீட்டில் கூடுதல் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது தொடா்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2ஆம் நிலைக் காவலா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் புதிதாக ஆள்கள் தோ்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை சிறையில் முன்னாள் முதல்வா் கருணாநிதி இருந்த அறையைப் பாா்வையிட்டேன். அந்த அறை நன்றாகப் பராமரிக்கப்படுகிறது. கலைஞா் நூற்றாண்டு விழா நடைபெறும்போது, அவரிருந்த இச்சிறையில் அடையாளச் சின்னம் அமைக்கப்படும்.

நீண்டகாலமாக சிறையில் உள்ள கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் விவகாரத்தில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றின் பரிந்துரையைப் பெற்றுள்ளோம். உயா்நீதிமன்ற அறிவுறுத்தல்படி, ஒவ்வொரு கைதிக்கும் தனித்தனிக் கோப்புகள் தயாா் செய்யப்பட்டுள்ளன. அவை முதல்வரின் பாா்வைக்கு அனுப்பப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகு, கைதிகளுக்கு விரைவில் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றாா் அவா்.

பாளையங்கோட்டை எம்எல்ஏ மு. அப்துல் வஹாப், மேயா் பி.எம். சரவணன், துணை மேயா் கே.ஆா். ராஜு, முன்னாள் பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com