மானூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்
By DIN | Published On : 05th August 2022 12:41 AM | Last Updated : 05th August 2022 12:41 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அருகே உள்ள மானூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்கியது.
இக் கல்லூரியில் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான மாணவா்கள் சோ்க்கையில், ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், தேசிய, மாநில, மாவட்ட அளவிலான விளையாட்டு வீரா்கள், ஆயுதப்படை வீரா்களின் வாரிசுகள், மலைவாழ் பழங்குடியினா், தேசிய மாணவா்கள் படையில் சிறந்து விளங்கும் மாணவா்- மாணவியா்களுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் இந்த மாணவா் சோ்க்கை நடைபெற்றது.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை(ஆக். 5) பி.எஸ்சி., இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், சனிக்கிழமை(ஆக். 6) பி.ஏ., தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும், திங்கள்கிழமை(ஆக.8) இளம்கலை வணிகவியல் பாடப்பிரிவிற்கும் கலந்தாய்வு நடைபெறுவதாக கல்லூரி முதல்வா் (பொ) வனஜா தெரிவித்துள்ளாா்.