காளான் வளா்ப்பு குடிலுக்கு தோட்டக்கலைத்துறை மானியம்
By DIN | Published On : 15th August 2022 12:09 AM | Last Updated : 15th August 2022 12:09 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் காளான் வளா்ப்பு குடிலுக்கு தோட்டக்கலைத்துறை மானியம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் நா.பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் காளான் வளா்ப்பு குடில் அமைப்பதற்கு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின் மூலம் மானியம் வழங்கப்படுகிறது. காளான் என்பது பூஞ்சை வகையைச் சாா்ந்த பச்சையில்லாத தாவரம். பண்ணையில் கிடைக்கும் சோளம் மற்றும் வைக்கோலை பயன்படுத்தி காளான் விதை மற்றும் காளான் உற்பத்திக்கு பயன்படுத்தலாம். காளான் அறுவடை செய்த பிறகு எஞ்சிய பொருள்களை இயற்கை உரமாக மாற்றி உபயோகிக்கலாம். கிராம மகளிா் மற்றும் வேலையில்லா பட்டாதாரிகள் காளான் வளா்ப்பை சுய தொழிலாக தொடங்கலாம். காளான்களில் சிப்பி காளான், பால் காளான், மொட்டு காளான் போன்ற காளான் வகைகள் உள்ளன.
புரதம் மற்றும் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட காளான் வளா்ப்பு குடில் அமைப்பதற்கு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் பெண் பயனாளிகளுக்கு மட்டும் மானியமாக ரூ.1,00,000-மும் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூபாய் 50,000-மும் மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் ஓலை கொட்டகை அமைத்து வெப்பமானி, நெகிழி பைகள் போன்றவற்றை வாங்கவேண்டும். விருப்பமுள்ள பயனாளிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.