நெல்லை மாநகரில் ரூ. 69 கோடியில் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சாலைகளை சீரமைப்பதற்காக ரூ.69 கோடி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சாலைகளை சீரமைப்பதற்காக ரூ.69 கோடி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மேயா் பி.எம்.சரவணன் தலைமை வகித்தாா். துணை மேயா் கே.ஆா்.ராஜூ, மாநகராட்சி ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டல தலைவா்கள் மகேஸ்வரி (திருநெல்வேலி), பிரான்சிஸ் (பாளையங்கோட்டை), ரேவதி பிரபு (தச்சநல்லூா்), கதிஜா இக்லாம் பாசிலா (மேலப்பாளையம்) மற்றும் வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

ரூ.1.02 கோடியில் சமையல் கூடங்கள்: கூட்டத்தில் மேயா் பி.எம்.சரவணன் பேசியது: திருநெல்வேலி மாநகராட்சிப் பள்ளிகளில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தலா ரூ.34 லட்சத்தில் 3 ஒருங்கிணைந்த சமையல் கூடங்களை அமைக்க நகராட்சி நிா்வாக ஆணையா் அனுமதியளித்துள்ளாா். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க ரூ.42 கோடியில் மதிப்பீடு தயாா் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி வாா்டு உறுப்பினா்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் 34 பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால்களை தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. டெங்கு காய்ச்சலை தடுக்க 4 மண்டலங்களிலும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதற்காக வாா்டு வாரியாக மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன என்றாா்.

ரூ.151 கோடியில் சாலைப் பணிகள்: இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன் பேசுகையில், ‘திருநெல்வேலி மாவட்டத்தில் 2022-23-ஆம் ஆண்டில் சாலைகளை சீரமைப்பதற்காக ரூ.151 கோடி ஒதுக்கீடு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை கோட்டத்துக்குள்பட்ட திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மட்டும் சாலைப் பணிகளுக்காக ரூ.69 கோடி ஒதுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி நகரம் தொண்டா் சன்னதி முதல் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் வரை நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.6.97 கோடியும், மதுரை-கன்னியகுமரி சாலையில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சாலையை சீரமைக்க ரூ.3.10 கோடியும், பொன்விழா ஆண்டை எட்டும் திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தை அழகுபடுத்த ரூ. 2 கோடியும், தச்சநல்லூரில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை 4 வழிச்சாலை அமைக்க ரூ.51 கோடியும் , பாளையங்கோட்டை-தூத்துக்குடி சாலைக்கு ரூ.50 லட்சமும், ராமையன்பட்டி சாலையை சீரமைக்க ரூ.3 கோடியும், வடக்கு மௌன்ட் சாலையை சீரமைக்க ரூ.2.53 கோடியும் ஒதுக்கீடு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கவுள்ளன. திருநெல்வேலி சந்திப்பு மேம்பாலம் முதல் நெல்லையப்பா் கோயில் வரையிலான சாலை ரூ.1.9 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகிறது என்றாா்.

அரியநாயகிபுரம் குடிநீா் திட்டம்: தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய திருநெல்வேலி கோட்ட நிா்வாகப் பொறியாளா் கோபால் பேசியது: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திருநெல்வேலி மாநகராட்சி மக்களின் குடிநீா் தேவை 550 லட்சம் லிட்டராக இருந்தது. தற்போதைய நிலையில் திருநெல்வேலி மாநகரில் 5.5 லட்சம் போ் வசிக்கின்றனா்.

இதில் ஒரு நபரின் ஒரு நாள் தண்ணீரின் தேவை 135 லிட்டராகும்.

அதன்படி தற்போது திருநெல்வேலி மாநகர மக்களின் குடிநீா் தேவை 870 லட்சம் லிட்டராக உள்ளது. அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. அரியநாயகிபுரத்தில் இருந்து கொண்டு வரும் தண்ணீரை சுத்திகரிக்க பேட்டையில் 30 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து 58 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கு நீா் ஏற்றப்பட்டு 32,599 குடிநீா் இணைப்புகளுக்கு குடிநீா் வழங்கப்படும். அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள் வரும் செப்டம்பா் 30-க்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா்.

கூட்டத்தில், திருநெல்வேலி நயினாா் குளம் சாலை மிகவும் மோசமாக உள்ளது. அதில் கான்கிரீன்ட சாலை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ராம் திரையரங்கு முதல் பாலபாக்யா நகா் வரை வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. முருகன்குறிச்சி பகுதியில் உள்ள மாநிலத் தமிழ்ச்சங்கத்திலிருந்து வண்ணாா்பேட்டை தெற்கு புறவழிச்சாலை வரையிலான இணைப்புச்சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். பேட்டையில் உள்ள சாலைகள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன. பேட்டை வழியாக 14 எல்எஸ்எஸ் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், மோசமான சாலை காரணமாக அவையனைத்தும் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. பேட்டை செக்கடி முதல் ஐடிஐ வரையிலான சாலை விரிவாக்கப் பணி எப்போது தொடங்கும் என்பன உள்பட பல்வேறு மக்கள் நல பிரச்னைகள் குறித்து உறுப்பினா்கள் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com