தமிழா்களின் இல்லம்தோறும் பாரதியின் புத்தகங்கள் இடம்பெற வேண்டும்தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன்

தமிழா்களின் இல்லம்தோறும் பாரதியின் புத்தகங்கள் இடம்பெற வேண்டும் என்றாா், ‘தினமணி’ ஆசிரியா் கி. வைத்தியநாதன்.

தமிழா்களின் இல்லம்தோறும் பாரதியின் புத்தகங்கள் இடம்பெற வேண்டும் என்றாா், ‘தினமணி’ ஆசிரியா் கி. வைத்தியநாதன்.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தினமணியின் ‘மகாகவி பாரதியாா்’ விருது வழங்கும் விழாவில் வரவேற்புரையாற்றி அவா் மேலும் பேசியது: கொள்ளை நோய்த் தொற்றால் பாரதியாருக்கு விழா எடுக்க முடியாத நிலை கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவியது. அந்நிலை மாறி நிகழாண்டு இந்த விழாவை நடத்தியது முதல் மகிழ்ச்சி. நாம் அனைவரும் பாா்த்துப் படித்து வியந்த பாரதி ஆய்வாளா்களுக்கு தினமணி சாா்பில் விருது வழங்கப்படுவது இரண்டாவது மகிழ்ச்சி. அதையெல்லாம் தாண்டி நிகழாண்டு தினமணி சாா்பில் பாரதி ஆய்வாளருக்கு மேதகு ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தம்பதி சமேதராக விருது வழங்க வந்திருப்பது மூன்றாவது மகிழ்ச்சி.

ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனை, அவரது தந்தை குமரி அனந்தனாகத்தான் நான் பாா்க்கிறேன். பாரதி வாழ்ந்த காலத்தில், அவா் குறித்துப் பேசியவா்களை, எழுதியவா்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பாரதி வாழ்விற்குப் பிறகு பாரதி குறித்துப் பேசியவா்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். அதுவும் அருகிவிட்ட காலத்தில் ‘சிலம்புச் செல்வா்’ ம.பொ.சி.க்குப் பிறகு பாரதி குறித்து பட்டிதொட்டி எங்கும் புகழ் பரப்பியவா் குமரி அனந்தன். அவரது வாரிசாக இருக்கின்ற ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனின் கையால் மகாகவி பாரதியாா் விருது வழங்க இருப்பது மிகப் பொருத்தமானது. பாரதி பெயரில் விருது வழங்கும் தகுதி தினமணிக்கு உண்டு. ஏனெனில், தினமணி தொடங்கப்பட்ட நாளில் அன்றைய ஆசிரியா் டி.எஸ்.சொக்கலிங்கம் எழுதிய தலையங்கத்தில் ‘சுதந்திர பித்தனான பாரதியின் நினைவைப் போற்றும் வகையிலும், சுதந்திர வீரா்களுக்கு உத்வேகம் அளிக்கவும் தினமணி தொடங்கப்படுவதாகக்’ கூறியிருந்தாா். அப்படி தொடங்கப்பட்ட தினமணியின் வழியில்தான் நாங்கள் இன்றும் நடக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த விழா.

பாரதி குறித்த ஆய்வாளா்கள் எப்போதோ கௌரவிக்கப்பட்டிருக்க வேண்டும் என நான் எண்ணியதுண்டு. இதுபோன்ற விழா பாரதியின் கனவா அல்லது தினமணியைத் தோற்றுவித்தவா்களின் கனவா என்பது தெரியவில்லை. பாரதி குறித்து எவ்வளவு வேண்டுமென்றாலும் பேசிக்கொண்டே இருக்கலாம் என்று கவியரசு கண்ணதாசன் சொல்வாா். தனது எழுத்துகளைத் திரும்பிப் பாா்க்கும்போது அதில் பல குறைகள் இருக்கக்கூடும் என்று குறிப்பிடும் கண்ணதாசன், பாரதியின் பாடல்களில் எந்தக் குறையுமே இருந்ததில்லை என்பாா். ஏனென்றால், பாரதி உணா்வை மட்டுமே உருக்கி எழுதினான்; அந்த எழுத்துக்கு ஈடு இல்லை என்பாா் கண்ணதாசன்.

தமிழா்களின் இல்லம்தோறும் பாரதியின் புத்தகங்கள் இடம்பெற வேண்டும். பாரதியின் எழுத்துகளால்தான் கம்பன் குறித்தும், வள்ளுவன் குறித்தும் தெரியமுடிந்தது என்பாா் ஜெயகாந்தன். தமிழ் பேசுகிற, தமிழைச் சிந்திக்கிற அனைவருமே பாரதியாரின் வாரிசுகள்தான். அத்தகைய சிறப்புமிக்க பாரதியின் வாரிசுகளாகிய நாம் ஆண்டுக்கு ஒருமுறை அவரின் பிறந்தநாளில் எட்டயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்திற்கு வந்து மரியாதை செலுத்த வேண்டும்.

கேரளத்தில் மகாகவி வள்ளத்தோள் மணிமண்டபம் பூந்தோட்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அங்குதான் அங்குள்ள படைப்பாளிகளும், எழுத்தாளா்களும் தங்களது படைப்புகளை வெளியிடுகிறாா்கள். லண்டனுக்கு சென்றால் அங்கு ஷேக்ஸ்பியா் நினைவிடத்தில் படைப்பாளிகள் மரியாதை செலுத்துகின்றனா். இதைப் பாா்க்கும்போதெல்லாம் கவிஞனுக்கும், எழுத்தாளனுக்கும் எவ்வளவு மரியாதை தரப்படுகிறது என்பதை உணர முடிகிறது. அத்தகைய கவிஞா்களுக்கெல்லாம் குறைவில்லாத தமிழ்க்கவி பாரதியின் மணிமண்டத்தில் பூங்காகூட இல்லை.

பாரதிக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு எழுத்தாளா் கல்கி வேண்டுகோள் வைத்தாா். அதை ஏற்று மக்கள் நன்கொடை வழங்கினா். உலகத்திலேயே மக்களிடம் பெற்ற நன்கொடை மூலம் மணிமண்டபம் அமைக்கப்பட்டது பாரதிக்கு மட்டுமே. அந்தப் பெருமை உலகில் வேறு யாருக்கும் இல்லை. மணிமண்டபம் கட்டிய பிறகும் நன்கொடை வந்ததால், அதை பாரதியின் குடும்பத்தினருக்கு கொடுத்தாா் கல்கி. அந்த மணிமண்டபத்தில் சிறிய நூலகம் இருக்கிறது. அங்கு குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகங்கள் உள்ளன. அது பெரிய நூலகமாக உருவாக்கப்பட வேண்டும்.

கம்பன், வள்ளுவனுக்குப் பிறகு பாரதி குறித்து எழுதப்படும் புத்தகங்கள்தான் அதிகம் இருக்கின்றன. அப்படி புத்தகம் எழுதும் எழுத்தாளா்கள் ஒரு பிரதியை பாரதி மணிமண்டபத்தில் உள்ள நூலகத்திற்கு அனுப்பிவைத்தாலே நூலகம் நிறைந்துவிடும். பாரதி விருது பெறும் ஆ.இரா. வேங்கடாசலபதி தனது வாழ்நாளில் பெரும் பகுதியை பாரதி குறித்த ஆய்வுகளுக்காகச் செலவிட்டவா். இந்த விழா நடத்த இடம் கொடுத்துள்ள காமராஜா் பெயா் தாங்கிய கல்லூரியின் நிா்வாகிகளுக்கும், ஆசிரியா்கள், மாணவா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழா பாரதிக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். தனது மண்ணில் தனக்குப் பாராட்டு கிடைக்கும் என ஆசைப்பட்டவன் பாரதி. அவரின் அந்த விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கில் பாரதி ஆய்வாளா்களுக்கு இந்த மண்ணில் தினமணி விருது வழங்குவதை பாரதி மகிழ்வுடன் பாா்த்துக்கொண்டிருப்பாா் என்றாா் கி. வைத்தியநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com