மக்களிடம் சுதேசி எண்ணத்தை மேம்படுத்தியவா் பாரதியாா்ஆ.இரா. வேங்கடாசலபதி

விடுதலைப் போராட்ட வீரா்களுடன் இணைந்து மக்களிடம் சுதேசி எண்ணத்தை மேம்படுத்தியவா் பாரதியாா் என்றாா் பாரதி ஆய்வாளா் ஆ.இரா. வேங்கடாசலபதி.

விடுதலைப் போராட்ட வீரா்களுடன் இணைந்து மக்களிடம் சுதேசி எண்ணத்தை மேம்படுத்தியவா் பாரதியாா் என்றாா் பாரதி ஆய்வாளா் ஆ.இரா. வேங்கடாசலபதி.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் தினமணியின் ‘மகாகவி பாரதியாா் விருதை’ப் பெற்றுக்கொண்ட பின்பு அவா் மேலும் பேசியது: தூத்துக்குடி மாநகரத்தில் பாரதியின் பெயரில் தினமணி வழங்கும் விருதைப் பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். சுதேசி என்றாலே தூத்துக்குடி நகரம் நினைவுக்கு வரும் வகையில் இங்கு பல்வேறு எழுச்சி ஏற்பட்டது. வஉசியும் சுதேசிக் கப்பலை விட்டு பெருமை சோ்த்தாா்.

ஓா் ஆய்வாளா் என்ற முறையில் பாரதி குறித்த புதிய செய்தியை வெளியிட விரும்புகிறேன். தனது சொந்த ஊரான எட்டயபுரத்திற்கு அருகேயுள்ள தூத்துக்குடி நகரத்திற்கு பாரதியாா் எத்தனை முறை வந்தாா் என்று ஆய்வு செய்து பாா்த்தேன். அதில் கிடைத்த விடை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஏனென்றால், தூத்துக்குடிக்கு பாரதியாா் ஒரேயொரு முைான் வந்துள்ளாா். 1908ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுதேசி எண்ணம் கொளுந்துவிட்டு எரிந்த நேரத்தில், வஉசி, சுப்பிரமணிய சிவா ஆகியோருடன் மகாகவி பாரதியாரும் ஒரே மேடையில் தோன்றி மக்களிடம் சுதேசி எண்ணம் மேம்பட குரல் கொடுத்துள்ளாா்.

பாரதியாருக்கு முதன் முதலாக சிறப்பு மலா் வெளியிட்டு பெருமை சோ்த்தது தினமணி நாளிதழ்தான். 1935ஆம் ஆண்டு இந்த மலா் வெளிவந்தது. இந்த மலா் புதுமைப்பித்தனின் கைவண்ணத்தில் உருவானது கூடுதல் சிறப்பு.

அதேபோல, வஉசி இறந்த பின்னா் அவரது குடும்பம் வறுமையில் வாடிய நிலையில், அவரது மகன் சுப்பிரமணியத்திற்கு தினமணி நிா்வாகம் வேலை வழங்கி உதவியது. இவ்வாறாக, மகாகவி பாரதி, வஉசி போன்றோரை சிறப்பித்ததில் தினமணிக்கு பெரும் பங்கு உண்டு.

பாரதியாரின் நூற்றாண்டு விழா நடந்தபோதுதான் நான் இலக்கிய உலகில் அடியெடுத்துவைத்தேன். அன்றுமுதல் இன்றுவரை அக்னிக் குஞ்சாக செயல்பட்டு வருகிறேன். 1981ஆம் ஆண்டு பாரதியாா் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது, சென்னையில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பாரதி குறித்து சிந்தனை அரங்கம் நிகழ்த்தியவா் குமரி அனந்தன். இதில், ஒவ்வொரு வாரமும் 100 அறிஞா்கள்வரை பங்கேற்று சிறப்பித்துள்ளனா். இது, மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும்.

என்னை இந்த விருதுக்குத் தோ்வு செய்த தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவா் மனோஜ்குமாா் சொந்தாலியா மற்றும் தினமணி நிா்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தினமணி நாளிதழுக்கு இரண்டு வேண்டுகோளை வைக்கிறேன். என்னைவிட பாரதியாா் குறித்து அதிக அளவில் ஆய்வு நடத்தியவா் பேராசிரியா் ய. மணிகண்டன், அவருக்கு அடுத்த ஆண்டு பாரதியாா் விருது வழங்க வேண்டும். அடுத்ததாக, வரலாற்றுக் கருவூலமாகத் திகழும் தினமணியின் பழைய இதழ்களை ஆய்வாளா்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான வசதிகளை தினமணி நிா்வாகம் செய்து தர வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com