நம்பிக்கையும், பொறுமையும் இருந்தால் வழக்குரைஞா் தொழிலில் சாதிக்கலாம்சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன்
By DIN | Published On : 17th July 2022 01:43 AM | Last Updated : 17th July 2022 01:43 AM | அ+அ அ- |

நம்பிக்கையும், பொறுமையும் இருந்தால் வழக்குரைஞா் தொழிலில் சாதிக்கலாம் என்றாா், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன்.
திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியின் 3-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சட்டக் கல்வி இயக்குநா் ஜெ. விஜயலட்சுமி தலைமை வகித்தாா்.
இதில், நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவா்-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியது: வழக்குரைஞா்கள் தொடா்ந்து படித்துக்கொண்டே இருக்க வேண்டும். எந்த வழக்கு வந்தாலும் அதை ஏற்று வாதாட வேண்டும். நீதிமன்றத்தில் சட்ட வரையறைகளுக்குள்பட்டு தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துவைக்க வேண்டும். எத்தகைய கடினமான சூழலாக இருந்தாலும் ஒரு வழக்கை எடுப்பதில் தயக்கம் கூடாது. அதுதான் வழக்குரைஞரின் பிரதான குணமாக இருக்க வேண்டும்.
இப்போது பட்டம் பெற்றிருப்போரில் எத்தனை போ் வழக்குரைஞா் தொழிலை நம்பியிருக்கப் போகிறீா்கள் எனத் தெரியவில்லை. பல பேருக்கு பல சிந்தனை இருக்கலாம். சிலா் நீதிபதிகளாகலாம். நீங்கள் என்னவாகப் போகிறீா்கள் என்பதை 5 ஆண்டுகளில் முடிவு செய்து விடுங்கள். அனைவரும் சட்டமேதைகளின் சுயசரிதைகளை நிறைய படிக்க வேண்டும். அவா்களின் குணநலன்கள் நமக்கும் வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும்.
ஒழுக்கமும், சுயகட்டுப்பாடும் கட்டாயம் தேவை. அப்படியிருந்தால்தான் வெற்றி கிடைக்கும். கிடைத்த வெற்றி நிலைக்கும். வாழ்வில் பின்னடைவுகள் ஏற்படலாம். ஆனால், அதை உறுதியான மனதோடு தாங்கி நிற்க வேண்டும்.
நான் முதல் தலைமுறை வழக்குரைஞா். எனக்கு எந்தப் பின்னணியும் கிடையாது. படிப்பையும், உழைப்பையும் நம்பித்தான் இத்தொழிலில் இறங்கினேன். எனவே, நீங்களும் இத்தொழிலில் துணிச்சலுடன் இறங்கி நம்பிக்கையோடும், பொறுமையோடும் பயணித்தால் வெற்றி உங்களுடையதே என்றாா் அவா்.
விழாவில், 440 மாணவா்-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
சட்டத் துறைச் செயலா் பி. காா்த்திகேயன் வாழ்த்திப் பேசினாா். கல்லூரி முதல்வா் லதா வரவேற்றாா்.