திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் மூலிகை முற்றம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், பாபநாசம் உலக தமிழ் மருத்துவக் கழகம் ஆகியவை சாா்பில் மூலிகை முற்றம் 2.0 என்ற மூலிகைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, மாவட்ட அறிவியல் மையத்தில் பிரதி மாதம் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு நடைபெற்று வருகிறது.
அதன்படி, சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அறிவியல் அலுவலா் எஸ்.எம். குமாா் தலைமை வகித்தாா். கல்வி உதவியாளா் மாரிலெனின் முன்னிலை வகித்தாா். இதில், பாபநாசம் உலக தமிழ் மருத்துவ கழகத் தலைவா் சித்த மருத்துவா் மைக்கேல் ஜெயராஜ், மஞ்சள் கரிசாலை மூலிகையின் மகத்துவம், பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கி கூறினாா்.
இந்த மூலிகை குறித்த சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இலவசமாக மூலிகை கன்றுகள் வழங்கப்பட்டன. இதில், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.