நெல்லையில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வு மினி மாரத்தான்
By DIN | Published On : 17th July 2022 06:58 AM | Last Updated : 17th July 2022 06:58 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வு மினி மாரத்தான் போட்டியை பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியை பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு. அப்துல் வஹாப் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, மாநகர காவல் துணை ஆணையா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போட்டியில் 120-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். இந்த ஓட்டமானது அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கி அரசு மருத்துவமனை வரை சென்று மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. இதில் பங்கேற்றவா்கள் செஸ் ஒலிம்பியாட் விளம்பரப் பதாகையை கையில் ஏந்தியபடி ஓடினா்.