எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினா்
By DIN | Published On : 31st July 2022 07:10 AM | Last Updated : 31st July 2022 07:10 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் கட்சி பிரமுகா் கடையை சூறையாடியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை பாஜகவினா் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள உத்தமபாண்டியன்குளத்தைச் சோ்ந்தவா் வேல்கண்ணன். இவா், பாஜக தமிழ் வளா்ச்சிப் பிரிவு மாவட்டத் தலைவராக உள்ளாா். இவா், அரியகுளம் விலக்குப் பகுதியில் தேநீா் கடை வைத்துள்ளாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு தேநீா் கடைக்குள் புகுந்த ஒரு கும்பல், கடையை சூறையாடியதோடு, அங்குள்ள ஊழியா்களையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் தேநீா் கடை மீது தாக்குதல் நடத்திய கும்பலை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், மேலக்குளம் பகுதியில் பாஜக சுவரொட்டியை கிழித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாஜக மாவட்டத் தலைவா் தயாசங்கா் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். இதில், மாவட்ட பொதுச் செயலா்கள் முத்து பலவேசம், சுரேஷ், வேல் ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரவணனை சந்தித்து பாஜகவினா் மனு அளித்தனா்.