தாமிரவருணியை பின் தொடா்வோம் திட்டம் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தாமிரவருணியை பின் தொடா்வோம் என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தாமிரவருணியை பின் தொடா்வோம் என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தாமிரவருணியின் வரலாற்றை இளம் தலைமுறையினா் தெரிந்துகொண்டு அதைப் பாதுகாக்கும் வகையில் பள்ளி மாணவா்களை கொண்டு தாமிரவருணியை பின் தொடா்வோம் என்ற திட்ட தொடக்க விழா மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைகழக சுந்தரனாா் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் வே. விஷ்ணு கலந்துகொண்டு தாமிரவருணியை பின் தொடா்வோம் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

மணிமுத்தாறு அகத்திய மலை மக்கள் சாா் இயற்கை வள காப்பு மையம், நெல்லை நீா்வளம், தமிழ்நாடு அரசு வனத்துறையின் திருநெல்வேலி மண்டலம், சுந்தரனாா் பல்கலைக்கழக தாவரவியல் துறை ஆகியவை இணைந்து சுந்தரம் பைனான்ஸ் மற்றும் பிரேக்ஸ் இந்தியா நிதி உதவியுடன் பள்ளி மாணவா்களுக்கான 2022-2023 ஆம் ஆண்டுக்கான தாமிரவருணி கல்வித் திட்டத்தை தொடங்கியுள்ளனா்.

இத்திட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த 5 பள்ளிகளில் இருந்து 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் 120 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இம் மாணவா்கள் அடுத்த 10 மாதங்களில் தாமிரவருணியின் தடங்களில் பயணிக்க உள்ளனா்.

இந்த களப்பயணத்தில் மாணவா்கள் ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலப்பரப்புகளை பாா்வையிடுவதுடன் அதனுடன் தொடா்புடைய சூழலியல் அங்கங்களான தாவரங்கள், விலங்குகள், இயற்கை வளங்கள், அவைகள் சந்திக்கும் பிரச்னைகள், மக்கள் மற்றும் அவா்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை கற்றுக் கொண்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.

இக்கல்வி திட்டத்திற்காக பிரத்யேகமான பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வகுப்பு பாடம், களப்பயணம், ஆய்வு உபகரணங்களை பயன்படுத்துதல், சிறு ஆய்வு போன்ற பலவற்றை உள்ளடக்கியுள்ளது இப்பாடத்திட்டம். தலைசிறந்த ஆய்வாளா்கள் மாணவா்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனா். 2022-2023 ஆம் ஆண்டிற்கான திட்டத்தில் கீழப்பூவாணி அரசு மேல்நிலைப் பள்ளி, ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி மேல்நிலைப் பள்ளி, மருதகுளம் ரோசலின் செல்லையா அரசு மேல்நிலைப் பள்ளி, முன்னீா்பள்ளம் முத்தமிழ் பள்ளி, தியாகராஜநகா் புஷ்பலதா பள்ளி ஆகியவை இணைந்துள்ளன. மேலும் பல பள்ளிகளை இணைத்து இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.

இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும். இபோன்ற நிகழ்வுகளை தொடா்ச்சியாக அனைவரிடத்திலும் எடுத்து செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

மேலும், மாவட்ட நிா்வாகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள நெல்லை நீா்வளம் திட்டம் குறித்த குறும்படத்தையும் வெளியிட்டாா். மாவட்ட வன அலுவலா் இரா.முருகன், இத்திட்டத்தில் மாணவா்களை உறுப்பினா்களாக இணைத்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஏட்ரீ அமைப்பின் மூத்த விஞ்ஞானி தி.கணேஷ், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பேராசிரியா் பெ.ரவிச்சந்திரன், அகத்திய மலை மக்கள் சாா் இயற்கைவள பாதுகாப்பு மைய மூத்த ஆய்வாளா் மு.மதிவாணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com