அதிக கட்டணம் வசூலிக்கும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை தேவை
By DIN | Published On : 16th June 2022 01:35 AM | Last Updated : 16th June 2022 01:35 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தியுள்ளது.
திருநெல்வேலி புகா் மாவட்ட எஸ்டிபிஐ மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட தலைவா் பீா்மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவா் மஜித், மாவட்ட செயற்குழு உறுப்பினா் முகம்மது ஷபி, தொகுதி தலைவா்கள் அம்பாசமுத்திரம் செய்யது இப்ராகிம், நான்குனேரி ஆஷிக், ராதாபுரம் தெளபிக், யாசா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக் கூட்டத்தில் புகா் மாவட்ட தலைமை அலுவலகம் களக்காட்டில் அமைக்க வேண்டும், புகா் மாவட்டத்திற்கு உள்பட்ட விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், அரிகேசவநல்லூா், பள்ளக்கால்பொதுக்குடி, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், வெள்ளங்குளி, சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல், களக்காடு, ஏா்வாடி, மூலைக்கரைப்பட்டி, வள்ளியூா், திசையன்விளை, பெட்டைகுளம், துலுக்கா்பட்டி ஆகிய இடங்களில் கொடியேற்றுவது, புகா் மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள நலிவடைந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள தீா்மானிக்கப்பட்டது.
மேலும் திருநெல்வேலி புகா் மாவட்டத்திற்கு உள்பட்ட சில தனியாா் பள்ளிகளில் அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து தமிழக அரசு தனிக்குழு அமைத்து பெற்றோா்களிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட பொதுச் செயலா் களந்தை மீராசா வரவேற்றாா். மாவட்டச் செயலா் சுலைமான் நன்றி கூறினாா்.