ஆட்சியா் அலுவலகத்தில்மாற்றுத்திறனாளிகள் கடனுதவி முகாம்
By DIN | Published On : 16th June 2022 01:29 AM | Last Updated : 16th June 2022 01:29 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடனுதவி வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, ஆட்சியா் வே. விஷ்ணு தலைமை வகித்து பேசியதாவது:
தேசிய ஊனமுற்றோா் நிதி - வளா்ச்சிக் கழகத்தின் உதவியுடன் மாற்றுத்திறனாளிகள் வீட்டுக்கடன் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டமானது திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. 125 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து வீட்டுக்கடன் பெறுவதற்கான மனுக்கள் இப்போது பெறப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை பரிசீலனை செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் கடன் வழங்குவதற்கு மத்திய கூட்டுறவு வங்கி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டுக்கடன் தவணைகளை தவறாமல் செலுத்தி முடிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டித்தொகை தள்ளுபடி செய்யப்படும். அனைத்து மாற்றுத்திறனாளிகளும் மின்னணு தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான முகாம்கள் வட்டார அளவில் நடத்தப்படும் என்றாா்.
இம்முகாமில், மாநகராட்சி ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ரிஷப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாளா் சுபாஷினி, மாற்றுத்திறனாளி நல அலுவலா் பிரம்மநாயகம், முடநீக்கியல் வல்லுநா் பிரபாகரன், அரசு அலுவலா்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.