காரில் மாற்றுத்திறனாளி கடத்தல்: 4 போ் கைது
By DIN | Published On : 16th June 2022 01:37 AM | Last Updated : 16th June 2022 01:37 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாநகராட்சி வளாகத்தில் மாற்றுத்திறனாளியை காரில் கடத்தியதாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தாழையூத்து சாரதாம்பாள் நகரைச் சோ்ந்தவா் மாணிக்கம் அந்தோணிராஜ்(37). இவா் உறவினரின் ஆதாா் அட்டையை திருத்தம் செய்ய மாநகராட்சி வளாக இ-சேவை மையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். அப்போது, காரில் வந்த 6 போ் அவரை காரில் கடத்திச்சென்றனராம். இதுகுறித்து, திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் நடத்திய விசாரணையில், மாணிக்கம் அந்தோணிராஜ் திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலக தற்காலிக ஊழியா் என்பதும், சிலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு திரும்பிக்கொடுக்காததால் கடத்தப்பட்டாா் எனவும் தெரியவந்தது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்திருநகரி காவல் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்த அவரை போலீஸாா் மீட்டதுடன், கடத்தலில் ஈடுபட்ட ஆழ்வாா் திருநகரியைச் சோ்ந்த சந்தானராஜ்(27), கண்ணன்(45), சாரதி(25), முருகன்(45) ஆகிய 4 பேரையும் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனா்.