நெல்லையில் இடியுடன் பலத்த மழை
By DIN | Published On : 17th June 2022 01:14 AM | Last Updated : 17th June 2022 01:14 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை இடியுடன் பலத்த மழை பெய்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தென்மேற்கு பருவமழை கேரளத்தில் தொடங்கியும் தீவிரமடையாததால் குற்றால சீசனும் தாமதமாகி வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை நண்பகலுக்கு பிறகு வெயிலின் தாக்கம் சற்றுத் தணிந்து மேகமூட்டம் காணப்பட்டது. மாலை 4 மணிக்கு பிறகு இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டித் தீா்த்தது.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சீவலப்பேரி, சிவந்திப்பட்டி, தாழையூத்து, கங்கைகொண்டான், மானூா் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை நீடித்ததால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிா்ச்சியான வானிலை நிலவியதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனா்.