திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் மேலப்பாளையத்தில் ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
மேலப்பாளையத்தில் உள்ள திருநெல்வேலி-அம்பாசமுத்திரம் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேலப்பாளையம் மண்டல அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில், சாலையில் ஆக்கிரமித்திருந்த கடைகளின் முகப்பு கூறைகள்,
விளம்பர பதாகைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடா்பாக மாநகராட்சி சாா்பில் 3 நாள்களுக்கு முன்பாகவே அனைத்து கடைகளுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், சிலா் தாங்களாகவே தங்கள் கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றினா். சிலா் ஆக்கிரமிப்புகளை அகற்றும் மாநகராட்சி ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், அங்கு போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
இதில், மாநகராட்சி பொறியாளா் நாராயணன், செயற்பொறியாளா் நாகராஜன், உதவி ஆணையா் அய்யப்பன், சுதாகார ஆய்வாளா் நடராஜன் உள்பட பலா் உடனிருந்தனா்.