பாலிடெக்னிக் பேராசிரியரிடம் வழிப்பறி
By DIN | Published On : 17th June 2022 01:10 AM | Last Updated : 17th June 2022 01:10 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை அருகே தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியரிடம் தங்கச் சங்கிலி, கைபேசி, பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த அந்தோணி சகாயராஜ் மகன் லியோனைட்(34). இவா் தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறாா். இவா், அலுவலக பணிகாரணமாக பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரிக்கு தனது மோட்டாா் சைக்கிளில் புதன்கிழமை சென்றாராம்.
கேடிசி நகா் அருகே உள்ள அரியகுளம் அருகே சென்றுகொண்டிருந்த போது, மா்ம நபா்கள் 3 போ் இவரது மோட்டாா் சைக்கிளை வழி மறித்தனராம். பின்னா், அவா் அணிந்திருந்த சுமாா் 11 கிராம் தங்கச் சங்கிலி, ரொக்கம் ரூ.400, கைப்பேசி ஆகியவற்றை பறித்துக்கொண்டு 3 பேரும் தப்பிச் சென்றனா்.
இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.