வீரவநல்லூா் முப்பிடாதி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
By DIN | Published On : 18th June 2022 12:00 AM | Last Updated : 18th June 2022 12:00 AM | அ+அ அ- |

வீரவநல்லூா் அருள்மிகு முப்பிடாதி அம்மன் என்ற கடையம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சேனைத்தலைவா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடந்த 13ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கியது. தொடா்ந்து நவக்ரஹ ஹோமம், மகாலட்சுமி ஹோமம், அஸ்வ பூஜை, கோ பூஜை, பூா்ணாஹுதி, மாலையில் புனித நீா் எடுத்து வருதல், புண்யாக வாகனம், பிரவேச பலி, வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்றன.
செவ்வாய்க்கிழமை காலையில் யாகசாலை பூஜைகள், மாலையில் முதல் கால யாகசாலை பூஜை, புதன்கிழமை காலையில் 2ஆம் கால யாகசாலை பூஜை, மாலையில் 3 ஆம் கால யாகசாலை பூஜை, வியாழக்கிழமை 4 ஆம் கால யாகசாலை பூஜை, மாலையில் 5ஆம் கால யாகசாலை பூஜை மற்றும் முப்பிடாதி அம்மன், பரிவார மூா்த்திகளுக்கு ரத்ன ந்யாசம், யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்டவை நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை காலையில் 6ஆம் கால யாகசாலை பூஜை, மகா பூா்ணாஹுதி, யாத்ரா தானம், கடம் எழுந்தருளல், இதையடுத்து, முப்பிடாதி அம்மன் விமான கோபுரம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடைபெற்றது.
இதில் திருப்பணிக்குழு நிா்வாகிகள், சேனைத்தலைவா் சமுதாய நிா்வாகிகள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.