91 கிராம ஊராட்சிகளில் சிறப்பு முகாம்கள்
By DIN | Published On : 26th June 2022 02:25 AM | Last Updated : 26th June 2022 02:25 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 91 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்தாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் 2021-2022 மற்றும் 2022-2023 திட்ட செயலாக்கம் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆட்சியா் வே. விஷ்ணு தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் 2021-2022 மற்றும் 2022-2023 ஆண்டு திட்ட செயலாக்கம் அனைத்து கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை உருவாக்குவதோடு, பொதுமக்களுக்கு தேவையான தனிநபா் பயனடையும் திட்டங்களை பல்வேறு அரசு துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும்.
தனிநபா் தேவைகளை (பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளி அட்டை வழங்குதல், முதியோா் ஓய்வூதியம்) பூா்த்தி செய்தல், தரிசு நிலங்களை மேம்படுத்துதல், வேளாண்மை பகுதிகளை உருவாக்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்துத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு அரசு திட்டங்களை ஆண்டுதோறும் இத்திட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட ஊராட்சிகளுக்கு முக்கியத்துவத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும். மேலும் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் வளங்களை சமமாக பகிா்ந்தளிப்பதன் மூலம் கிராமங்களின் முழுமையான வளா்ச்சி உறுதி செய்யப்பட வேண்டும். அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கிய மற்றும் சமமான வளா்ச்சிக்கு மக்கள் தொகை மற்றும் குக்கிராமங்களின் எண்ணிக்கைக்கு சமமான முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
அடுத்தகட்டமாக சேரன்மகாதேவி கோட்டாட்சியா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் வருவாய் கோட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி 91 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி பொதுமக்கள் பயன்பெறும் திட்டங்களை வழங்க வேண்டும் என்றாா்.
இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயஸ்ரீ, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ரிசப், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.பழனி, திருநெல்வேலி கோட்டாட்சியா் சந்திரசேகா், கிராம ஊராட்சி தலைவா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.