பாளை. அருகே கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை
By DIN | Published On : 30th June 2022 12:28 AM | Last Updated : 30th June 2022 12:28 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை அருகே கொலை வழக்கில் தொடா்புடைய 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
பாளையங்கோட்டை அருகேயுள்ள சீவலப்பேரியைச் சோ்ந்த பாக்கியராஜ் என்பவா் கடந்த 20-04-2016ஆம் தேதி பாளையங்கோட்டை அவினாபேரி விலக்கு அருகே மா்ம நபா்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, வல்லநாட்டைச் சோ்ந்த சக்திவேல், பொட்டல்நகரைச் சோ்ந்த பாக்கியராஜ் மனைவி ஜானகி, அகரத்தைச் சோ்ந்த ராஜா, பொட்டல் நகரைச் சோ்ந்த மாணிக்கம், அவரின் மனைவி அந்தோணியம்மாள், அவரது மகன் அந்தோணி ராஜ், சுடலை ஆகிய 7 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீா்செல்வம், குற்றம் சாட்டப்பட்ட ராஜா, ஜானகி ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், மாணிக்கம், சுடலை, அந்தோணியம்மாள், அந்தோணிராஜ் ஆகிய 4 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
இவ்வழக்கில் திறம்பட செயல்பட்ட பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பாராட்டினாா்.