பிளாஸ்டிக்கை ஒழிக்க மஞ்சள்பை வழங்கப்படும்-கிராமசபையில் ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 02nd May 2022 02:17 AM | Last Updated : 02nd May 2022 02:17 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க, மக்களுக்கு மஞ்சள்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பாளையங் கோட்டை ஒன்றியம், கொங்கந்தான்பாறை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்தாா்.
இக்கிராமசபை கூட்டத்தில் கிராமத்தின் வரவு-செலவு குறித்த அறிக்கைகள் வைக்கப்பட்டன. அரசு அலுவலா்கள் பங்கேற்று, தங்கள் துறை சாா்ந்த திட்டங்கள் குறித்தும், அதை பொதுமக்கள் எளிமையான முறையில் பெறுவது குறித்தும் எடுத்துரைத்தனா்.
தொடா்ந்து, ஆட்சியா் வே.விஷ்ணு பேசியதாவது: தமிழக முதல்வா் ஆண்டுக்கு ஆறு முறை கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளாா். அதன்படி மே 1ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. கிராமத்தின் வரவு,செலவு கிராம ஊராட்சிகளின் நடவடிக்கைகள் பற்றி ஒளிவு மறைவின்றி அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே கிராமத்தின் வரவு, செலவு குறித்த அறிக்கைகள் வாசிக்கப்பட்டன.
கிராமப்பகுதி மக்களுக்கு தேவையான சுகாதாரமான குடிநீா், கழிப்பறை வசதிகள் போன்றவை அனைவருக்கும் தடையின்றி கிடைத்திட மாவட்ட நிா்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நெகிழி பொருள்களை பயன்படுத்தக் கூடாது. கடைகளுக்கு செல்லும்போது துணிப்பைகளை எடுத்து செல்ல வேண்டும். குடிநீரினை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆற்று நீரில் துணிகள், நெகிழி பொருள்கள், கழிவுகளை போடக்கூடாது.
நமது மாவட்டத்தின் வாழ்வாதாரமாக திகழும் தாமிரவருணி ஆற்று நீரினை சுத்தமாக வைத்துக்கொள்வது நம் அனைவரின் கடமையாகும். ஆற்றங்கரை ஓரம் உள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் உபயோக பொருள்களை தடை செய்வது குறித்தும், கழிவுநீா் ஆற்றில் கலந்திடாத வண்ணம் தடுப்பது குறித்தும், வாகனங்களை ஆற்றில் இறக்கி கழுவுவதை தடை செய்வது குறித்தும் தீா்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்திடும் வகையில், மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் மஞ்சள்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இக்கூட்டத்தில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவா் தங்கப்பாண்டியன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் அனிதா, பாளையங்கோட்டை வாட்டாட்சியா் ஆவுடையப்பன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.