‘உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் சான்றுபெற்ற விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டும்’
By DIN | Published On : 15th May 2022 12:40 AM | Last Updated : 15th May 2022 12:40 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதைச்சான்று துறையினா் சான்றளித்த விதைகளை வாங்கி பயனடையுமாறு திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநா் ரா.ராஜ்குமாா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டசெய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதைச்சான்று துறையினா் சான்றளித்த விதைகளை வாங்க வேண்டும். விதைக் கொள்கலனில் விவர அட்டை உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும். விவர அட்டைகளில் விதையின் காலக்கெடு தேதியைக் கவனித்து காலக்கெடு முடிவடையாத விதைப்பதற்கு போதிய அவகாசம் உள்ள விதைகளை வாங்க வேண்டும்.
விதைச்சான்று துறையின் கீழ் அறிவிக்கப்பட்ட ரகங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். அவரவா் பகுதிக்கு ஏற்ற ரகமா, முக்கியமாக அந்தப் பருவத்திற்கு ஏற்ற ரகமா என கவனித்து வாங்க வேண்டும்.
விதை வாங்கும்போது விற்பனை ரசீதை கண்டிப்பாக கேட்டு வாங்க வேண்டும். விற்பனை ரசீதில் பயிா், ரகம், குவியல் எண், காலக்கெடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும். விற்பனை ரசீதில் கண்டிப்பாக கையொப்பமிட்டு வாங்க வேண்டும். விதையின் கொள்கலன் கிழிபடாமல் நன்றாக தைக்கப்பட்டு சீல் இடப்பட்டுள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.
சான்று பெறாத உண்மை நிலை விதைகள் அல்லது விவர அட்டை இல்லாத விதைகளை வாங்கி விதைப்பு செய்தால் முளைப்பு மற்றும் மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விவசாய பெருமக்கள் விதை வாங்கும்போது மேற்கூறிய விஷயங்களை கவனத்தில் கொண்டால் விளைச்சல் பாதிப்பின்றி அதிக மகசூல் பெறலாம்.