வடக்கன்குளம்: மோதலில் உயிரிழந்தவா்சடலத்தை வாங்க உறவினா்கள் மறுப்பு
By DIN | Published On : 16th May 2022 05:50 AM | Last Updated : 16th May 2022 05:50 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் கோயில் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்ததவரின் சடலத்தை வாங்க அவரது உறவினா்கள் மறுத்து வருகின்றனா்.
வடக்கன்குளம் அதிசய விநாயகா் கோயில் திருவிழா வரவு செலவு கணக்கு பாா்ப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோயில் துணைச் செயலா் வெங்கடேஷ் ராஜபாண்டியை கோயில் தா்மகா்த்தா மகேந்திரபூபதி சம்பத், ராஜகுமரன் மற்றும் சிலா் சோ்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த வெங்கடேஷ் ராஜபாண்டி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னா் வீட்டுக்குச்சென்ற சிறிது நேரத்தில் இறந்தாராம். இதனை அடுத்து தனது தகப்பனாரை அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டதாக அவரது மகன் தனீஸ்ராஜா, பணகுடி காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் கொலை வழக்கு பதிவு செய்து வெங்கடேஷ் ராஜபாண்டியை தாக்கியவா்களை தேடி வருகின்றனா்.
இந்நிலையில் வெங்கடேஷ் ராஜபாண்டியின் சடலம் நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது மகன் மற்றும் உறவினா்கள் சடலத்தை வாங்க மறுத்து வருகின்றனா். உறவினா்களிடம் வள்ளியூா் காவல்துறை ஏ.எஸ்.பி. சமைசிங் மீனா மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். குற்றவாளிகளை கைது செய்யாமல் சடலத்தை வாங்குவதில்லை என உறவினா்கள் மறுத்துவிட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...