நெல்லை கைலாசபுரத்தில் ரூ.50 லட்சத்தில் சாலைப் பணி
By DIN | Published On : 13th October 2022 02:38 AM | Last Updated : 13th October 2022 02:38 AM | அ+அ அ- |

திருநெல்வேலி கைலாசபுரத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகரின் வாகனப் போக்குவரத்து மிகுந்த முக்கிய இடங்களில் ஒன்றாக கைலாசபுரம் சாலை, ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதிக்கு செல்வோருக்கு அணுகுசாலையாகயும் உள்ளது. இச்சாலை, குழாய் பதிக்கும் பணி உள்ளிட்ட காரணங்களால் குண்டும்- குழியுமாக மாறியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனா். இந்தச் சாலையை சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி ரூ.50 லட்சத்தில் புதிதாக தாா்ச்சாலை அமைக்கப்படுகிறது.
இப் பணியை திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலரும், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு.அப்துல்வஹாப் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மேயா் பி.எம்.சரவணன், துணைமேயா் கே.ஆா்.ராஜு, தச்சநல்லூா் மண்டல தலைவா் ரேவதி பிரபு, உதவி ஆணையா் வெங்கட்ராமன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.