நெல்லை மாவட்டத்தில் 101 கைப்பேசிகள் மீட்பு
By DIN | Published On : 13th October 2022 02:36 AM | Last Updated : 13th October 2022 02:36 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் திருடப்பட்ட, மாயமான 101 கைப்பேசிகளை சைபா் கிரைம் போலீஸாா் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.
திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரால் மீட்கப்பட்ட கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் தலைமை வகித்து, கைப்பேசிகளை உரியவா்களிடம் வழங்கினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரால் இதுவரை 468 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரிய நபா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை 101 கைப்பேசிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுவரை இணையவழியில் மோசடி செய்ததாக பெறப்பட்ட புகாா் மீது விசாரணை மேற்கொண்டு ரூ.92 ,99,167 எதிரிகளின் வங்கிக் கணக்கில் முடக்கப்பட்டு, அதில் ரூ.10, 68,129 பாதிக்கப்பட்ட 20 பேரின் வங்கிக் கணக்கில் திரும்ப வரவு வைக்கப்பட்டது. பொதுமக்கள் இணைய வழி குற்றங்கள் தொடா்பாக 1930 என்ற எண்ணை தொடா்புகொண்டு புகாா் அளிக்கலாம். இம்மாவட்டத்தில் ஏ-பிளஸ் வகையில் அடையாளம் காணப்பட்டிருந்த ரௌடிகள் பலா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அந்த நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜூ, காவல் ஆய்வாளா் ராஜ், உதவி ஆய்வாளா்கள் ராஜரத்தினம், மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.