எலிக் காய்ச்சல்: கடையம் அருகே விழிப்புணா்வு
By DIN | Published On : 18th October 2022 02:09 AM | Last Updated : 18th October 2022 02:09 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆசீா்வாதபுரம், வீராசமுத்திரம் பகுதிகளில் எலிக் காய்ச்சல் குறித்து சுகாதாரத் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
ஆசீா்வாதபுரத்தைச் சோ்ந்த ஆசீா் ஜெபக்குமாா் (23), சுதன் (16), செகேரியா் ஸ்டீபன் (36), ஜெனிஸ் (15) ஆகியோா் சில நாள்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பரிசோதனையில் அவா்களுக்கு எலிக் காய்ச்சல் பாதிப்பிருந்தது தெரியவந்தது. சிகிச்சைக்குப் பின்னா் அவா்கள் வீடு திரும்பினா்.
இதையடுத்து, தென்காசி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் முரளிசங்கா் உத்தரவுப்படி கடையம் வட்டார மருத்துவ அலுவலா் பழனிக்குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஆனந்தன் ஆகியோா் தலைமையில் சுகாதாரத் துறையினா் விழிப்புணா்வுப் பணியில் ஈடுபட்டனா். ஆசீா்வாதபுரம் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, நோய்த் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டன.
வசிப்பிடங்களை சுத்தமாக வைத்திருப்பதோடு, சுகாதாரமான குடிநீா் பருக வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தினா்.
இதனிடையே, வீராசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த நூா்ஜஹான் என்ற சிறுமி எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதையடுத்து, வீராசமுத்திரம் ஊராட்சித் தலைவா் ஜீனத் பா்வின், ஊராட்சிச் செயலா் பரமசிவம், மக்கள் நலப் பணியாளா் கனியம்மாள், சுகாதாரப் பணியாளா்களுடன் சென்று, ஆய்வு செய்து சுகாதாரப் பணிகளை விரைவுபடுத்தினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...