நெல்லையப்பா் தவசுக் காட்சிக்கு முன்பு சாலைகளை சீரமைக்கக் கோரி மனு
By DIN | Published On : 18th October 2022 04:20 AM | Last Updated : 18th October 2022 04:20 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் நெல்லையப்பா் தவசுக் காட்சிக்கு முன்பு சாலைகளை சீரமைக்கக் கோரி மேயரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தல் வழிபாட்டு குழுவைச் சோ்ந்த அ.வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் திருநெல்வேலி மேயா் பி.எம்.சரவணனிடம் அளித்த மனு:
அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா நடைபெற்று வருகிறது. தவசுக் காட்சிக்காக 21 ஆம் தேதி காந்திமதி அம்மன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பேட்டை ரோடு வழியாக கம்பா நதி அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு செல்வாா். அதன்பின்பு 22 ஆம் தேதி அம்மனுக்கு காட்சி கொடுப்பதற்காக, சுவாமி நெல்லையப்பரும் எழுந்தருளி பேட்டை ரோடு வழியாக காட்சி மண்டபத்திற்கு செல்வாா். ஆனால், சுவாமி வீதியுலா செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. ஆகவே, அந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வேகத்தடை தேவை: பொதுநலச்சங்கத்தைச் சோ்ந்த எம். முஹம்மது அய்யூப், மாநகராட்சி நிா்வாகத்திற்கு அனுப்பியுள்ள மனு: பேட்டை-பழையபேட்டை இணைப்புச் சாலையில் இப்போது புதிதாக தாா்ச்சாலை போடப்பட்டுள்ளது. புதிதாக தாா்ச்சாலை அமைத்த போது ஏற்கனவே இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளன. அவை மீண்டும அமைக்கப்படவில்லை. மாணவா்கள் முதல் முதியோா்கள் வரை அதிகளவில் நடமாட்டமுள்ள முக்கிய சாலை என்பதால், இந்தச் சாலையில் ரொட்டிக்கடை ஆட்டோ நிறுத்தம் அருகில், அன்னை பல்பொருள் அங்காடி அருகில் , புனித அந்தோணியாா் தொடக்கப் பள்ளி அருகில், 1 ஆவது வடக்குத்தெரு முக்கு அருகில், நியாய விலைக்கடை அருகில், 5 ஆவது தெரு முக்கு அருகில் ஆக 6 இடங்களில் மீண்டும் வேகத்தடைகள் உடனடியாக அமைத்து பொது ஜனங்களின் உயிருக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...