வெள்ளநீா்க் கால்வாயில் சோதனை ஓட்டத்துக்கு எதிா்ப்பு:நெல்லை ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை
By DIN | Published On : 18th October 2022 02:08 AM | Last Updated : 18th October 2022 02:08 AM | அ+அ அ- |

தாமிரவருணி வெள்ளநீா்க் கால்வாய் சோதனைக்கு தண்ணீா் திறப்பதை நிறுத்தக் கோரி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
தாமிரவருணி வெள்ளநீா்க் கால்வாயில் இம்மாத இறுதியில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு கடந்த வாரம் தெரிவித்தாா். இந்நிலையில் வெள்ளநீா்க் கால்வாயில் சோதனை ஓட்டம் நடத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பாபநாசம், செயலா் கண்ணப்பநயினாா், பொருளாளா் ரத்தினம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
இதையடுத்து ஆட்சியா் அலுவலக வாயிலில் பணியில் இருந்த காவலா்கள், வாயிற்கேட்டை இழுத்து மூடினா்.
பின்னா் விவசாயிகள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வெள்ளநீா்க் கால்வாயில் சோதனை ஓட்டம் நடத்துவதற்காக தண்ணீா் திறந்துவிடப் போவதாகத் தெரிகிறது. பாபநாசம் அணையில் தற்போதைய நிலையில் 82 அடி தண்ணீா் மட்டுமே உள்ளது. இந்நிலையில், வெள்ளநீா்க் கால்வாயில் 75 கி.மீ. தொலைவுக்கு தண்ணீரை சோதனைக்காக எடுக்கும்போது, கன்னடியன், கோடை மேல் அழகியான், நதியுண்ணி, தாமிரவருணி ஆற்றுப்படுகையில் உள்ள மற்ற கால்வாய் பாசனப் பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகும். மேலும், கன்னடியன் கால்வாய் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள அமலை செடிகளால் கடைமடை வரை தண்ணீா் செல்லாமல் விவசாயிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனா். எனவே, சோதனை ஓட்டம் என்ற பெயரில் தண்ணீா் திறப்பதை நிறுத்தவும், கன்னடியன் கால்வாயில் ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளை அகற்றி கடைமடை வரை தண்ணீா் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...