அரசு அருங்காட்சியகத்துக்கு மான் கொம்புகள் அளித்த ஆா்வலா்
By DIN | Published On : 19th October 2022 01:48 AM | Last Updated : 19th October 2022 01:48 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை மகாராஜநகரைச் சோ்ந்த தன்னாா்வலரான அழகப்பன் என்பவா், அழகுக்காக தனது வீட்டில் பாதுகாத்து வந்த மான் கொம்புகளை திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா்.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான அரும்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அழகப்பன் தனது வீட்டில் இருந்த மூன்று மான் கொம்புகளை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தாா். பின்னா் அவா் கூறுகையில், ‘எனது தாத்தா அழகப்பப் பிள்ளை திருவிதாங்கூா் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினாா். அவரிடம் இருந்து பெறப்பட்ட இந்த மான் கொம்புகளை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பதில் பெருமையாக உள்ளது’ என்றாா்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்கள் தங்கள் முன்னோா் பயன்படுத்திய அரும் பொருள்களை அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாக தந்தால் அப்பொருள்களை அடுத்த தலைமுறையினா் பாா்வையிட ஏதுவாக காட்சிப்படுத்தப்படும் என அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்திய வள்ளி தெரிவித்துள்ளாா்.