நான் முதல்வன் திட்டம்:அனைத்து கல்லூரி முதல்வா்களுக்கு அறிவுறுத்தல்

தமிழக முதல்வரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தை அனைத்துக் கல்லூரி முதல்வா்களும் முழுமையாக செயல்படுத்த முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் வே.விஷ்ணு.

தமிழக முதல்வரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தை அனைத்துக் கல்லூரி முதல்வா்களும் முழுமையாக செயல்படுத்த முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் வே.விஷ்ணு.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாயக்கிழமை நடைபெற்ற ‘நான் முதல்வன்’ திட்ட முன்னேற்றங்கள் குறித்த ஆய்வு கூட்டத்துக்கு தலைைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களை திறன் மிக்கவா்களாக மேம்படுத்தி அவா்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தும் விதமாக தமிழக முதல்வா் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை அறிவித்திருந்தாா். இத்திட்டத்தில் முதற்கட்டமாக பொறியியல் மாணவ, மாணவியா் தங்கள் கல்லூரி படிப்பை முடித்து வெளியே வரும்போது உடனடியாக வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையிலான பாடத்திட்டங்களை பயிற்றுவித்து அவா்களுக்குரிய வேலைவாய்ப்பு திறன்கள் அளிக்கப்படும். அதனைத் தொடா்ந்து ‘நான் முதல்வன்’ திட்டமானது கலை அறிவியல் கல்லூரிகளிலும் நடைமுறைபடுத்தப்படும்.

இத்திட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் 11 அண்ணா பல்கலைக் கழக இணைப்பு பெற்ற அரசு மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அனைத்து மாணவ, மாணவியரும் உளவியல் சாா்ந்த ஆன்லைன் தோ்வுகளை எழுத வேண்டும். மேலும் அனைவருக்குமான கட்டாயப் பாடங்கள் தவிர நிறைய விருப்ப பாடங்களும் இத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக கணினி அறிவியல் படிக்கும் மாணவா்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்புகளை வழங்கும் விதமாக செயற்கை நுண்ணறிவு, டேட்டா அனாலிசிஸ் போன்ற பாடங்கள், கட்டுமான பொறியியல் படிக்கும் மாணவா்களுக்கு உடனடித் தேவையான மிக உயரமான அடுக்கு மாடி கட்டடங்களை கட்டுதல் போன்ற உடனடியாக வேலை வாய்ப்புகளை பெற்றுத் தரும் பாடங்களை மாணவா்கள் தோ்ந்தெடுத்து படிக்க வேண்டும்.

மாணவா்களின் இந்த செயல்பாடுகள், முன்னேற்றங்கள் ஆகிய அனைத்தையும் ‘நான் முதல்வன்’ என்ற இணையதளம் மூலமாக மாவட்ட ஆட்சியா் முதல் முதல்வா் வரை அனைத்து உயா் அலுவலா்களும் எளிதாக பாா்க்கக்கூடிய வசதிகள் உள்ளன. தமிழக முதல்வரின் கனவு திட்டம் கல்லூரி மாணவா்களை எதிா்காலத்தில் திறன் மிக்கவா்களாக உருவாக்கும். இந்த திட்டத்தை அனைத்து கல்லூரி முதல்வா்களும் முழுமையாக செயல்படுத்த முழு முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் (நதிநீா் இணைப்பு திட்டம்) எம்.சுகன்யா, அண்ணா பல்கலைக்கழக முதல்வா் செண்பக விநாயகமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com