திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணை பகுதியில் பல்லுயிா் பூங்கா அமைக்கப்படவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், கடந்த மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மணிமுத்தாறு பூங்கா புனரமைக்கப்படும் என அறிவித்ததைத் தொடா்ந்து, அதற்கான திட்ட மதீப்பிடு தயாா் செய்யப்பட்டது.
பூங்கா பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளன. முதற்கட்டமாக பூங்கா புனரமைப்பு பணிக்காக ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்லுயிா் பூங்கா அமைக்கும் பணிகளும், அதைத் தொடா்ந்து மாணவா்களுக்கான அறிவியல் பூங்கா, சிறுவா்களுக்கான விளையாட்டுப் பூங்கா, சுற்றுலாப் பயணிகளுக்கான அனைத்துப் பொழுது போக்கு வசதிகளுடன் கூடிய பூங்கா உள்ளிட்டவையும் அமையவுள்ளன.
மழைக் காலம் முடிந்தவுடன் முதற்கட்டப் பணிகள் தொடங்கும். 23.06 ஏக்கா் பரப்பளவில் அமையவுள்ள இந்தப் பூங்கா திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு அம்சங்களுடன் கூடிய ஒரு மாபெரும் சுற்றுலாத் தளமாக அமையும் என்றாா்.
ஆய்வின்போது சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் முஹமது சபீா் ஆலம், உதவி இயக்குநா் பேரூராட்சிகள் மாஹின் அபுபக்கா், நீா்வளத்துறை செயற்பொறியாளா் மாரியப்பன், சுற்றுலா அலுவலா் சீதாராமன், உதவி செயற்பொறியாளா்கள் தங்கராஜா, முருகன், மணிமுத்தாறு பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) சத்ய தாஸ், அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் விஜயா, உதவிப் பொறியாளா் மகேஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.