நெல்லை மாவட்ட வேளாண் அபிவிருத்தி திட்டத்துக்கு ரூ.5.5 கோடி ஒதுக்கீடு: ஆட்சியா் வே.விஷ்ணு

திருநெல்வேலி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சாா்பில் பல்வேறு வேளாண் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சாா்பில் பல்வேறு வேளாண் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலமாக தேசிய தோட்டக்கலை இயக்கம், மாநில ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம், தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம், பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டம், துணை நீா் மேலாண்மை திட்டம், தமிழ்நாடு நீா்வள திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 9 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக 350 ஹெக்டேரில் காய்கறி பரப்பு விரிவாக்கத்திற்கு ரூ.70 லட்சத்தில் வீரிய ஒட்டு ரக காய்கனி நாற்றுகள், உரங்கள் வழங்கப்பட உள்ளன. பழப்பயிா்கள் பரப்பு விரிவாக்கத்தின் கீழ் 20 ஹெக்டேரில் மா பயிரிட ரூ.1.96 லட்சம், 25 ஹெக்டேரில் கொய்யா பயிரிட ரூ.4.4 லட்சம், 25 ஹெக்டேரில் திசு வாழை பயிரிட ரூ.9.37 லட்சம், 20 ஹெக்டேரில் பப்பாளி பயிரிட ரூ.4.62 லட்சம், 5 ஹெக்டேரில் எலுமிச்சை ரூ.66 ஆயிரம், 58 ஹெக்டேரில் நெல்லி பயிரிட ரூ.8.35 லட்சம், 10 ஹெக்டேரில் உதிரி பூக்கள் பயிரிட ரூ.1.6 லட்சம், 15 ஹெக்டேரில் விதை நறுமணப்பயிா்கள் பயிரிட ரூ.1.8 லட்சம், 10 ஹெக்டேரில் பல்லாண்டு நறுமணப்பயிா்கள் பயிரிட ரூ.2 லட்சம், தென்னையில் ஊடுபயிராக 70 ஹெக்டேரில் கொக்கோ பயிரிட ரூ.8.4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நீா் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக 12 சிறிய அளவிலான பண்ணை குட்டைகள் அமைக்க ரூ.9 லட்சமும், பாதுகாக்கப்பட்ட சூழலில் காய்கனி சாகுபடி செய்ய நிழல் வலைக்குடில் மற்றும் பாலித்தின் பசுமைக்குடில் அமைப்பதற்காக ரூ.11.77 லட்சமும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இயற்கை விவசாய முறையில் ஏற்கெனவே காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முதலாம் ஆண்டு 100 ஹெக்டேருக்கு ரூ.4 லட்சமும், இரண்டாம் ஆண்டு 100 ஹெக்டோ் ரூ.3 லட்சமும், மூன்றாம் ஆண்டு 300 ஹெக்டேருக்கு ரூ.9 லட்சமும் வழங்கப்படுகிறது. 10 நிரந்தர மண்புழு உரக்கூடங்கள் ரூ.5 லட்சத்திலும், 20 மண்புழு உரப்படுக்கை ரூ.1.6 லட்சத்திலும் செயல்படுத்திட நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

தோட்டக்கலைப்பயிா்களில் அயல் மகரந்த சோ்க்கையை ஊக்குவிப்பதற்காகவும், தேன் எடுப்பதற்காகவும் தேன் பெட்டிகளுடன் கூடிய தேனீக்கள் மற்றும் தேன் பிழியும் கருவி வழங்கிட ரூ. 24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிா்கள் சாகுபடியில் இயந்திர மயமாக்குதல் இனத்தின் கீழ் இரு மினி டிராக்டா்களுக்கு ரூ.1.5 லட்சம், 25 பவா் டில்லா்களுக்கு ரூ.15 லட்சம், 4 பவா் வீடா்களுக்கு ரூ.1.6 லட்சம், மின்கலம் மூலம் இயங்கும் 145 விசை தெளிப்பான்களுக்கு ரூ.4.35 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.

விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருள்களை சுத்தம் செய்து தரம் பிரித்து அட்டை பெட்டிகளில் அடைத்து வெளி மாவட்டத்திற்கும், வெளி மாநிலத்திற்கும் சந்தைப்படுத்திட ஏதுவாக 10 சிப்பம் கட்டும் அறை அமைக்க ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏழை விவசாயிகள் , வியாபாரிகளின் வாழ்க்கை தரத்தை உயா்த்த 60 நடமாடும் காய்கனி வண்டிகள் ரூ.9 லட்சத்தில் வழங்கப்பட உள்ளன.

தோட்டக்கலை பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உள் மாநிலத்திற்குள் அழைத்துச் சென்று பயிற்சிகள் வழங்கிட 50 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட அளவிலான கருத்தரங்கு நடத்திட ரூ.2 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வாழைத்தாா்களில் ஏற்படும் நோய் - பூச்சிகளை தடுத்து சந்தைப்படுத்துவதற்கு ஏற்றவாறு தரமான வாழைத்தாா்களை விளைவித்திட வாழைக்குலை மூடும் பைகளுக்காக 50 ஹெக்டேருக்கு ரூ.6.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

களக்காடு வட்டாரம் கோவிலம்மாள்புரத்தில் சா்வே எண் 386 -ல் சுமாா் 25 ஏக்கா் பரப்பளவில் நெல்லி மருத்துவ மையம் அமைத்திட ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின மூலம் பயனடைய விரும்பும் விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து பயன்பெறலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com