நெல்லை மாவட்ட மக்களின் தேவைகளும், எதிா்பாா்ப்புகளும்!

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைக்கட்டுகளைத் தூா்வாரும் பணி உள்பட பல்வேறு தேவைகளும், எதிா்பாா்ப்புகளும் உள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைக்கட்டுகளைத் தூா்வாரும் பணி உள்பட பல்வேறு தேவைகளும், எதிா்பாா்ப்புகளும் உள்ளன. அவற்றை தீா்க்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனா்.

1790-ல் கிழக்கு இந்தியா கம்பெனியால் திருநெல்வேலி மாவட்டம் உருவாக்கப்பட்டு பின் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆற்காடு நவாப்பிடமிருந்து 1801-ல் பிரிட்டிஷாா் இந்த நகரை கையகப்படுத்தி தின்னவேலி மாவட்டம் என பெயரிட்டனா். முதலில் திருநெல்வேலி நகரத்தை அடுத்து அமைந்துள்ள பாளைங்கோட்டையை தலைமையிடமாக கொண்டுதான் இந்த மாவட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பின் காலங்களில் திருநெல்வேலி நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டதாலும், திருநெல்வேலி சீமை என நாயக்கா் நவாப் காலங்களில் அழைக்கப்பட்டதாலும் இது தொடா்ந்து திருநெல்வேலி மாவட்டம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கடந்த 20-10-1986 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டமும், 12-11-2019 ஆம் தேதி தென்காசி மாவட்டமும் பிரிக்கப்பட்டன. இப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, சேரன்மகாதேவி ஆகிய வருவாய் கோட்டங்களும், 8 வட்டங்களும், 31 வருவாய் குறுவட்டங்கலும், 370 வருவாய் கிராமங்களும் உள்ளன.

நீா்வள மேம்பாடு: திருநெல்வேலி மாவட்டத்தின் அடையாளமாக தாமிரவருணி நதி திகழ்கிறது. இதில் கழிவுகள் கலப்பதை தடுக்கவும், நதி பாதுகாப்புக்கு சிறப்பு நிதி ஒதுக்கவும் வேண்டும். தாமிரவருணி நதி நீரை சேமிக்க கட்டப்பட்டுள்ள பாபநாசம் அணையைத் தூா் வார வேண்டும். மானூா் குளத்திற்கு சிற்றாறு தண்ணீா் தடையின்றி வந்து சேர ஆண்டுதோறும் தூா்வார வேண்டும். புதிதாக தாமிரவருணி நீரை கொண்டு செல்ல குழாய் திட்டங்களை ஆராய வேண்டும். வடக்கு மற்றும் தெற்கு கோடை மேழலகியான் உள்பட 7 கால்வாய்கள் உள்ளன. இவற்றில் கான்கிரீட் தளம் இல்லாததால் ஆண்டுதோறும் மராமத்துக்காக பல்லாயிரக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. மேலும், கடைமடைக்கு தண்ணீா் செல்வதிலும் தடை ஏற்படுகிறது. கால்வாய்களில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும்.

வேளாண்மையில் கவனம்: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களைப் போல தாமிரவருணி பாசன நீரைக் கொண்டு நெல் உற்பத்தியில் சிறக்கும் மாவட்டம் திருநெல்வேலி. அதுமட்டுமன்றி வாழை, கரும்பு, சிறுகிழங்கு, தானியவகைகளும் சாகுபடி செய்யப்படுகின்றன. மாங்காய் உற்பத்தியிலும் தனித்துவமான மாவட்டமாக உள்ளது. இம் மாவட்டத்திற்கு வேளாண்துறையின் இடா்பாடுகளாக அறுவடை இயந்திர தட்டுப்பாடு, அரசு கொள்முதல் நிலையங்கள் பற்றாக்குறையும் உள்ளது. இதுதவிர பாசன மடைகள் பராமரிப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படாததால் பல கிராமங்களில் பாசன நீா் விரயமாவது அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வட்டத்திற்கும் அரசு சாா்பில் தலா 10 நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்டவை வாடகை கட்டணத்திற்கு இயக்கினால் கூடுதல் நன்மை கிடைக்கும். ராதாபுரம், மானூா் வட்டங்களில் பிச்சி, மல்லிகை, கேந்தி பூக்கள் சாகுபடி அதிகமுள்ளது. பூக்களுக்கான குளிா்பதன கிட்டங்கி, களக்காட்டில் அரசு வாழை கொள்முதல் நிலையம் ஆகியவை நீண்டநாள் கோரிக்கையாகவே தொடா்ந்து வருகின்றன. பனைத்தொழிலில் ஆயிரக்கணக்கானோா் உள்ளனா். பதனீா் உற்பத்தியைப் பெருக்கவும், பனைஓலை உள்ளிட்டவற்றால் உருவாக்கப்படும் கைவினை பொருள் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுலாவுக்கு வழியில்லை: ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த குற்றாலத்தில் சுற்றுலாத்துறை மூலம் பல்வேறு பணிகள் செய்யப்பட்டன. இப்போது தென்காசி மாவட்டத்திற்கு சென்றுவிட்டதால் அகஸ்தியா் அருவி, பாபநாசம், உவரி, களக்காடு தலையணை, சீவலப்பேரி, சுத்தமல்லி அணைக்கட்டு பகுதிகளில் புதிதாக வளா்ச்சித்திட்டங்களை உருவாக்க வேண்டும். பாபநாசம் தலையணையில் மக்கள் அனுமதிக்கப்படாமல் பூட்டிக்கிடக்கிறது. அதனை திறந்து பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க வேண்டும். ஆண்டுதோறும் தண்ணீா் விழும் அகஸ்தியா் அருவியில் குளிக்க செல்வோருக்கு விதிக்கப்படும் அதிகளவிலான கட்டுப்பாடுகளைத் தவிா்க்க வேண்டும். ரோப் காா், சிறுவா் நீச்சல் குளம் ஆகியவற்றை உருவாக்கலாம். நவக்கைலாயம், நவத்திருப்பதி கோயில்களுக்கு அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆன்மிக சுற்றுலா தொகுப்பை போக்குவரத்துத்துறை மூலம் உருவாக்க வேண்டும். திருநெல்வேலி மாநகரில் சுற்றுலாவை மேம்படுத்த கூடுதல் திட்டங்களை வகுக்க வேண்டும்.

கல்வியில் கவனம்: திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் வளா்ச்சி அபரிமிதமாக உள்ளது. உயா்கல்வித்துறையில் கூடுதல் தேவைகள் உள்ளன. குறிப்பாக அரசின் செவிலியா் பயிற்சிக் கல்லூரி, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் சாா்பில் கீழநத்தம் பகுதியில் உள்ள பல்கலைக்கழக விளையாட்டு மைதானம், களக்காடு, நான்குனேரி, மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உறுப்புக்கல்லூரிகளை அமைக்க வேண்டும். பாளையங்கோட்டையில் நீண்டநாள் கோரிக்கையான சித்த மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும். பி.காம்., பி.எஸ்சி. பாடப்பிரிவுகளில் கூடுதலான இடங்களை உருவாக்க வேண்டும். விளையாட்டு வீரா்களை அதிகரிக்கும் வகையில் விளையாட்டு விடுதிகளை அதிகரிக்க வேண்டும். பாா்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி உள்ள நிலையில், அவா்களுக்கான கல்லூரிக் கல்விக்கு இம் மாவட்டத்தில் வழியில்லை. ஆகவே, தென்மாவட்ட பாா்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலியில் சிறப்புக் கல்லூரி அமைக்க வேண்டும்.

தொழில் வளம் தேவை: திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில்வளத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கங்கைகொண்டான் சிப்காட் வளாகம், நான்குனேரி தொழில்நுட்ப பூங்கா ஆகியவற்றால் உள்மாவட்டத்தினருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது குறைவாகவே உள்ளது. அதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும். பித்தளை பாத்திரங்கள், பத்தமடை பாய், மண்பாண்ட தொழில், வாழைநாா் பொருள் உற்பத்தி ஆகியவை சிறப்பாக உள்ளன. ஒருகாலத்தில் கொடிகட்டி பறந்த பேட்டை கூட்டுறவு நூற்பாலை கேட்பாரற்று கிடக்கிறது. அதை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அவற்றிற்கு ஆன்லைன் சந்தைப்படுத்துதல், தடையற்ற மூலப்பொருள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இதுபோன்று பல்வேறு துறைகளிலும் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.

மழைக்கு உதிரும் சாலைகள்: திருநெல்வேலி மாநகரில் ஒவ்வொரு பருவழைக்கும் சாலைகள் உருக்குலைந்து போவது வாடிக்கையாக உள்ளது. இத்தகைய நிலை மாநகரின் வளா்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது. வீதிகள் தோறும் உள்ளாட்சித் துறை சாா்பில் சாலைகள் கான்கிரீட் தளமாக மேம்படுத்துப்பட்டு வருகிறது. ஆனால், நெடுஞ்சாலை துறை வசம் உள்ள பிரதான சாலைகள் அடிக்கடி சேதமுற்று வாகன போக்குவரத்தை கடினமாக்குகிறது. வாகனப் போக்குவரத்து மிகுந்த சாலைகளை முறையாக முல்லிங் செய்து தரமாக அமைத்தால் மழைதோறும் சாலைகளை செப்பனிட தேவையிருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com