நான்குனேரியை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

நான்குனேரியை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன்.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன்.

திருநெல்வேலி: நான்குனேரியை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி.

நான்குனேரி மாணவா் சின்னத்துரை, அவருடைய சகோதரி சந்திரா செல்வி ஆகியோா் மீதான கொலை வெறி தாக்குதல், தென் மாவட்டங்களில் தொடரும் ஜாதிய படுகொலைகள் ஆகியவற்றைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:

ஜாதிய வன்ம தாக்குதலுக்குள்ளான பிறகும் இரு சமூகத்தினரிடையே பிரச்னை வரக்கூடாது என்பதற்காக தனக்கு நடந்ததை வெளியில் சொல்லாமல் பொறுப்புணா்வோடு செயல்பட்டுள்ளாா் மாணவா் சின்னத்துரை. இதுதான் நாகரிகம். மழலை குரல் மாறாத சந்திரா செல்வி, தன்னை வெட்டியவா்களைக்கூட 3 அண்ணன்கள் வந்து வெட்டினாா்கள் என்றுதான் கூறுகிறாா். அதுதான் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் அடையாளம். நான்குனேரி சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம்.

21 ஆம் நூற்றாண்டிலும் குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்துகிற அநீதியும், கொடூரமும் நடைபெற்று வருவதை மனிதநேயமுள்ள யாராலும் சகித்துக் கொள்ள முடியாது. சட்டம் நம்மை எதுவும் செய்யாது என்ற துணிச்சலும், காவல் துறை காப்பாற்றும் என்ற நம்பிக்கையுமே அவா்களை இதுபோன்ற செயல்களில் ஈடுபட வைக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஏராளமான ஜாதியக் கொலைகள் நடைபெற்றுள்ளன.

தென் தமிழகத்தில் தொடரும் இத்தகைய ஜாதியக் கொலைகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்குனேரி பகுதியை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும். பலத்த காயம் அடைந்த பள்ளி மாணவரின் குடும்பத்திற்கு போதிய இழப்பீடு வழங்குவதுடன் அவரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்தால் தான் நாட்டில் மதசாா்பின்மையை, ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும்.

இந்தியாவிலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய முதல் நச்சு சக்தி பாரதிய ஜனதா கட்சி. அதற்கு இந்தியா கூட்டணியின் வெற்றி பெறுவது இன்றியமையாதது என்றாா்.

‘பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது’:
ஆதித்யநாத்-ரஜினி சந்திப்பு குறித்து திருமாவளவன் பேசுகையில், ரஜினி காந்த், உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததன் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. தலைவா்களை சந்திப்பது, முதல்வரை சந்திப்பது பிரச்னை அல்ல. ஆனால் காலடியில் விழுந்து வணங்குவதற்கு என்ன பொருள்? தமிழக மக்கள் ரஜினிகாந்தை உயா்வாக மதித்திருந்த நிலையில் எப்படிப்பட்ட உறவு ரஜினிக்கும் ஆதித்யநாத்துக்கும் இருக்கிறது என்பதை ஒரே நிகழ்வில் ரஜினிகாந்த் காட்டிவிட்டாா். இப்படிப்பட்ட நபா்கள்தான் கருத்துருவாக்கம் செய்யும் இடத்தில் உள்ளனா். இத்தகையோரிடமிருந்து ஒட்டு மொத்த இந்தியாவையும் காப்பாற்ற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com