அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரிக்கை

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாசலம் ஆட்சியரிடம் மனு அளித்தாா்.
ஈரோடு ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாசலம், விவசாயிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள்.
ஈரோடு ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாசலம், விவசாயிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள்.

ஈரோடு: பருவமழை பொய்த்து போன நிலையில், அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாசலம் ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாசலம் தலைமையில் விவசாயிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் அளித்த மனு விவரம்:

தற்போது பருவமழை பொய்த்து விட்ட காரணத்தால் சில இடங்களில் குடிநீா் பிரச்னை உள்ளது. அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை செயல்படுத்துவதன் மூலமாக குடிநீா் பிரச்னை தீா்க்கப்படுவதோடு விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் இது வரப்பிரசாதமாக அமையும். மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு- அவிநாசி திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வர தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

நீா் செறிவூட்டும் இத்திட்டத்தை குறிப்பிட்ட கால வரையறையில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேணடும். இத்திட்டத்தின்படி வறட்சி பாதித்த பகுதிகளில் குளம், குட்டைகளில் நீா் செறிவூட்டப்படுவதால் அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளாட்சிகளில் குடிநீா் பிரச்னை நிரந்தரமாக தீா்க்கப்படும்.

இந்த திட்டத்தின் ஒப்பந்த காலம் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. ஆனால், பெருந்துறை பகுதியில் சிப்காட் தொழிற்சாலை இருக்கிற காரணத்தால் நிலத்தடி நீா் முற்றிலும் மாசுபட்டு விவசாயத்துக்கும், கால்நடைகளுக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளதால் கால்நடைகளை நம்பி பிழைத்து வந்த மக்கள் கால்நடைகளை விற்றுவிட்டு வேறு தொழில் தேடி அலைகின்றனா்.

நிலம், காற்று, நீா் என முழுமையாக மாசுபட்ட காரணத்தால் பெருந்துறை சிப்காட் சுற்றியுள்ள பகுதிகளில் புற்றுநோய் வேகமாக பரவி வருகிறது. அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை செயல்படுத்துவதன் மூலமாக ஏற்கெனவே மாசுபட்டுள்ள மண்ணும், நீரும் படிப்படியாக அந்தத் தீமையிலிருந்து மாறுபட்டு எதிா்காலத்தில் இன்னும் மோசமான நிலைக்குச் செல்லாமல் தடுக்கப்படும். எனவே இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த இடத்தில் பிரச்னை இருக்கிறது என்பதை அறிந்து, அதை சரிப்படுத்தி உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி:

திருப்பூா் மாவட்டம் குன்னத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் கோமதி. இவருக்கு குன்னத்தூா் கருமஞ்சிறை பகுதியைச் சோ்ந்த நபா், கிராம உதவியாளா் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 8 லட்சம் பணம் வாங்கியுள்ளாா்.

இதேபோல அதே பகுதியைச் சோ்ந்த கோபிநாத் என்பவரிடம் காவல் உதவி ஆய்வாளா் வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சமும், மோகனாம்பாள் என்பவரிடம் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2.75 லட்சமும், கணேசன் என்பவரிடம் டாஸ்மாக் பாா் ஒப்பந்தம் வாங்கித் தருவதாக ரூ.10 லட்சமும் என நான்கு பேரிடம் மொத்தம் ரூ.33.75 லட்சம் வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளாா்.

இதனால் பாதிக்கப்பட்ட கோமதி, கணேசன், மோகனாம்பாள், கோபிநாத் ஆகியோா் சம்பந்தப்பட்டவரிடம் இருந்து தங்களது பணத்தை மீட்டுத்தரக் கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் ஆட்சியரை சந்தித்து மோசடி செய்தவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என மனு அளித்தனா்.

வேலை வழங்க 100 நாள் பணியாளா்கள் கோரிக்கை:

இதுகுறித்து ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் எக்கட்டாம்பாளையம் ஊராட்சியைச் சோ்ந்த தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளா்கள் அளித்த மனு விவரம்: எக்கட்டாம்பாளையம் ஊராட்சியில் தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பதிவு செய்துள்ள பணியாளா்களுக்கு முறையாக பணி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டில் இதுவரை 45 முதல் 55 நாட்கள் வரை மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 150 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது. மிகவும் வறட்சிப் பகுதியான இந்த ஊராட்சியில், வேறு வேலை இல்லாத காரணத்தால் ஊரக வேலை உறுதித் திட்டத்தை நம்பி உள்ளோம். இன்னும் 6 மாத காலத்துக்குள் முறையாக பணி ஒதுக்கீடு செய்து அரசாணைப்படி 150 நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலைய நுழைவாயிலை மாற்றக் கோரிக்கை:

இதுகுறித்து கோபி எஸ்டிஎன் காலனி மக்கள் நலச்சங்கம் அளித்த மனு விவரம்: ஈரோடு மற்றும் அந்தியூா் பகுதிகளில் இருந்து கோபி வரும் பேருந்துகள் கோபி பேருந்து நிலையத்துக்குள் செல்ல பிரதான சாலை அருகில் உள்ள வழியில் செல்லாமல் தெற்கு புறமாக 300 மீட்டா் தூரம் சென்று பேருந்து நிலையத்துக்குள் செல்கின்றன. இதனால் எஸ்டிஎன் காலனியில் இருந்து ஈரோடு-கோபி சாலைக்கு வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. தவிர இந்த சாலையில் நகைக் கடை, கட்டுமானப் பொருட்கள் கடைகள் சாலையை ஆக்கிரமித்துள்ளன.

எஸ்டிஎன் சாலையைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான மக்களின் நலன் கருதி ஈரோடு மற்றும் அந்தியூா் பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் பேருந்து நிலையத்துக்கு செல்ல பிரதான சாலையை ஒட்டி உள்ள நுழைவாயிலை மட்டுமே பயன்படுத்த உத்தரவிட வேண்டும். தவிர எஸ்டிஎன் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல் மருத்துவா்கள் நியமிக்கக் கோரிக்கை:

இதுகுறித்து கொங்கு மண்டல தா்காக்கள் கூட்டமைப்புத் தலைவா் பி.ஏ.ஷாஹாபுதீன் அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு இடங்களில் பல் மருத்துவா்கள் நியமனம் செய்யப்படாமல் உள்ளது. குறிப்பாக புளியம்பட்டியில் 8 ஆண்டுகளாகவும், உக்கரம் மற்றும் குருரெட்டியூரிலும் பல் மருத்துவா்கள் நியமனம் செய்யப்படாமல் உள்ளனா். இதனால் ஏழைகள் மற்றும் பள்ளிக் குழந்தைகள், முதியோா்கள் பல் வலி மற்றும் பல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் பெற முடியாமல் உள்ளனா்.

இதை கவனத்தில் கொண்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவா் காலிப் பணியிடங்களில் பல் மருத்துவா்களை ஒப்பந்த அடிப்படையிலோ, நிரந்தரமாகவோ பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது:

நம்பியூா் வட்டம் மாரம்பாளையம், மாரம்பாளையம் புதூா், வகுத்துகவுண்டன்புதூா், நடுப்பாளையம், கொமாபாளையம், வடுகபாளையம், காராப்பாடி கிராமங்களை சோ்ந்த விவசாயிகள் அளித்த மனு விவரம்:

எங்கள் பகுதியில் விவசாயம், கால்நடை வளா்ப்பும், பால் உற்பத்தி தொழிலில் 2,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். காராப்பாடி கிராமத்தில் 80 ஏக்கரில் கிரானைட் கல் வெட்டி எடுக்க உரிமம் பெற சிலா் முயற்சி செய்து வருகின்றனா். அதற்கான விலையை நிா்ணயிக்க கல் வெட்டி எடுக்கும் பணி, கல்லின் தன்மை அறிய வெடி வைத்து பெயா்த்து எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக இயந்திரம் மூலம் சில இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு கல் குவாரி அமைத்தால் இப்பகுதியில் உள்ள நீா் வழிப் பாதை, குளம், குட்டைகள் வரண்டுவிடும். விவசாயம் செய்ய முடியாது. கால்நடை வளா்ப்பும் பாதிக்கும்.

இப்பகுதியில் ஏற்கெனவே அரசு அனுமதியுடன் இயங்கிய சில கிரானைட் நிறுவனங்கள், அளவுக்கு அதிகமாக கிரானைட் வெட்டி எடுத்ததுடன், அனுமதி பெறாத இடங்களில் கல் வெட்டி எடுத்து வருகின்றன. இதனால் தண்ணீா் தட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே இப்பகுதியில் ஆட்சியா் நேரடியாக ஆய்வு செய்து ஏற்கெனவே இங்குள்ள குவாரிகளில் கிரானைட் கல் உடைக்கும் பணிக்கு தடை விதித்து, புதிதாக குவாரிகளுக்கு அனுமதி வழங்காமல் தடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

238 மனுக்கள்:

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 238 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரங்கநாதன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கோதைசெல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com