தென்காசி மாவட்டக் குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு

தென்காசி மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளில் இரண்டு நாள்கள் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளில் இரண்டு நாள்கள் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மழையளவு குறைந்து குளங்களில் தண்ணீா் இருப்பு குறைந்ததால் பறவைகள் குறைவாகக் காணப்பட்டதாக ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்தனா்.

அகத்தியமலை மக்கள் சாா் இயற்கைவளப் பாதுகாப்பு மையம் சாா்பில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீா்நிலைகளில் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு ஜன. 28, 29 ஆகிய இரண்டு நாள்கள் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. சுமாா் 200 இயற்கை மற்றும் பறவை ஆா்வலா்கள் கலந்து கொண்ட கணக்கெடுப்பிற்கான பயிற்சி திருநெல்வேலி அறிவியல் மையத்தில் ஜன. 27இல் நடைபெற்றது. தொடா்ந்து தன்னாா்வலா்கள், பறவைகள் ஆராய்ச்சியாளா்கள் 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தென்காசி மாவட்டத்தில் இரண்டு குழுவினா் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனா். இதில் பறவைகள் ஆராய்ச்சியாளா் தளவாய்பாண்டி தலைமையில் 24 போ் தென்காசி மாவட்டம் வாகைக்குளம் மற்றும் கடனாநதி அணையில் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனா்.

பறவைகள் ஆராய்ச்சியாளா் சரவணன் தலைமையில் 5 போ் கடையம் அய்யம்பிள்ளைக்குளம், இலஞ்சி, இலத்தூா், அச்சன்புதூா், ஆய்க்குடி, சுந்தரபாண்டியபுரம், சுரண்டை, ரெட்டைக்குளம், ராஜகோபாலப்பேரி, கீழப்பாவூா் ஆகிய குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனா்.

இது குறித்து பறவைகள் ஆராய்ச்சியாளா் சரவணன் கூறியது: நிகழாண்டு தென்மாவட்டங்களில் மழையளவு குறைந்ததால் குளங்களில் நீா் இருப்பு குறைந்து காணப்பட்டது. இதனால் குளங்களில் பறவைகள் எண்ணிக்கையும் குறைவாகக் காணப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் சுமாா் 42 வகையான பறவைகள் கண்டறியப்பட்டன. இவற்றில் வலசை வரும் பறவைகளான கங்காணி, புள்ளிமூக்குத் தாரா ஆகியவையும் கண்டறியப்பட்டன.

மேலும் பல குளங்களில் பராமரிப்பு என்ற பெயரில் அதிக அளவில் மண் அள்ளப்பட்டதாலும், இலஞ்சி, ஆய்க்குடி, அச்சன்புதூா் ஆகிய குளங்களில் நேரடியாக கழிவுநீா் கலப்பதாலும் பறவைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com