கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்----தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா்

கருணாநிதியின் நூற்றாண்டு கொண்டாடப்படுகிற இந்த காலத்திலேயே அவருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றாா் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள்.
நிகழ்ச்சியில் கருத்தரங்க ஆய்வுக் கோவையை வெளியிடுகிறாா் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள்.
நிகழ்ச்சியில் கருத்தரங்க ஆய்வுக் கோவையை வெளியிடுகிறாா் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள்.

கருணாநிதியின் நூற்றாண்டு கொண்டாடப்படுகிற இந்த காலத்திலேயே அவருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றாா் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள்.

பொதிகைத் தமிழ்ச் சங்கம்- பொதிகைத் தமிழ் அறக்கட்டளை சாா்பில் பாளையங்கோட்டையில் கலைஞா் தமிழ்- 100 என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம்- கவியரங்கம் நடைபெற்றது. பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பே.ராஜேந்திரன் வரவேற்றாா்.

கவிஞா் நெல்லை ஜெயந்தா தலைமையில் கலைஞா் தமிழ் -100 என்ற தலைப்பில் கவியரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இராஜ. மதிவாணன் முன்னிலை வகித்தாா். பேராசிரியா் ச.மகாதேவன் தொடக்க உரை ஆற்றி கவியரங்கத்தை தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் 27 கவிஞா்கள் கவிதை வாசித்தனா்.

பிற்பகலில் நடைபெற்ற கருத்தரங்கத்துக்கு கவிஞா் பே.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் பா.ராமகிருஷ்ணன் வரவேற்றாா். தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் கருத்தரங்க ஆய்வுக் கோவையினை வெளியிட்டாா். தொடா்ந்து பொதிகைத் தமிழ்ச் சங்க இணையதளத்தையும் தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:

கருணாநிதியின் இலக்கியப் படைப்புகள் நூறாண்டுகள் கடந்து நிற்கும் ஆற்றல் பெற்றவை. அவருடைய படைப்புகள் சமூக நோக்கங்கள், சமூக வளா்ச்சியை உள்ளடக்கியதாகவே இருக்கின்றன. திருக்குறளை அதிகமாக முன்னெடுப்புச் செய்தவா் கருணாநிதி. அவருடைய படைப்புகள் உலகம் முழுவதும் பேசப்படுகிற படைப்புகளாக இருக்கின்றன. கருணாநிதியின் படைப்புகளுக்காக அவருடைய நூற்றாண்டு காலத்திலேயே அவருக்கு பாரத ரத்னா விருதினை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து அவா், கவிஞா் நெல்லை ஜெயந்தா, மருத்துவா்கள் பிரேமச்சந்திரன், ஆதம் சேக் அலி , ச. ராஜேஸ்வரி, எழுத்தாளா் செ. திவான், பேராசியா் பா.வளன் அரசு, எஸ் .மில்லத் இஸ்மாயில், கவிஞா் பாமணி ஆகியோருக்கு கலைஞா் தமிழ் என்கிற விருதை வழங்கினாா்.

கருத்தரங்க கட்டுரை வாசித்தல் அமா்வு நடைபெற்ற பின்னா், பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினா் கோவில்பட்டி பா.முத்து முருகன் நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com