

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,910 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு இழப்பீடாக ரூ.18.5 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.
சென்னை மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு ஆலோசனையின் பேரில், திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவால் திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மற்றும் 10 வட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட நீதிபதியும், திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சி.பி.எம்.சந்திரா தொடங்கி வைத்தாா்.
நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, 3ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி பன்னீா்செல்வம், 4ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி திருமகள், குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி குமரேசன், மகளிா் நீதிமன்ற நீதிபதி விஜயகுமாா்,
தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் மனோஜ்குமாா், முதன்மை சாா்பு நீதிபதி அமிா்தவேலு, மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன்ராம், திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான இசக்கியப்பன், முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சந்தானம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
27 அமா்வுகளாக நடைபெற்ற இந்த மக்கள் நீதிமன்றத்தில் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரசமாக முடிக்கக் கூடிய குற்ற வழக்குகள் உள்பட 6,314 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் 2, 639 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.15,76, 40, 922 சமரச இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத தாவாக்களாகிய 600 வங்கிக் கடன் வழக்குகள் விசாரிக்கப்பட்டு, அதில், 271 வழக்குகள் முடிக்கப்பட்டு
ரூ.2,74,43,203 இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான இசக்கியப்பன் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.